3-ம் உலக போரை தடுக்க மோடியால் மட்டுமே முடியும் - அண்ணாமலை பேச்சு
|நாட்டை பாதுகாக்க, இறையாண்மையை பாதுகாக்க 2024ல் பிரதமர் மோடியின் தலைமை மிக அவசியமாக உள்ளது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை,
கோவை தொகுதிக்குட்பட்ட சூலூரில் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:-
ரஷியா -உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கு முன்பு சிரியாவில் நடந்த தாக்குதலில் ஈரான் அதிகாரிகள் இறந்தார்கள். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நேரடி போர் சூழல் தொடங்கியுள்ளது. இந்த போர் நேரத்தில் தான் இந்தியாவின் தலைமை இன்னும் வலிமையாக இருக்க வேண்டும்.
நாட்டை பாதுகாக்க, இறையாண்மையை பாதுகாக்க 2024ல் பிரதமர் மோடியின் தலைமை மிக அவசியமாக உள்ளது. காரணம் கடினமான ஒரு சூழ்நிலைக்குள் உலகம் சென்று கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் போர்சூழல் நிலவினாலும் மோடி பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. இப்படிப்பட்ட கடினமான சூழலிலும் 10 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேறிய நாடாக மோடி உயர்த்தியுள்ளார். மூன்றாம் உலக போர் சூழலை தவிர்க்க முடியும் என்றால் அது மோடி அவர்களால் மட்டுமே முடியும். அனைத்து உலக தலைவர்களிடமும் பேச முடியும் என்றால் அது மோடியால் மட்டுமே முடியும்.
2029ல் மோடி உலகத்தினுடைய தலைவராக உருவெடுப்பார். உலகத்தின் முன்னணி நாடாக இந்தியா இருக்கும். பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர நாங்கள் எப்போதோ அறிவித்து விட்டோம். ஆனால் மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாநில அரசுக்கு வரும் வருமானம் காணாமல் போகும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த2 ஆண்டுகளில் 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை பெட்ரோல்- டீசல் விலையை குறைத்துள்ளோம்.2014-ல் மோடி இந்தியாவுக்கு தேவைப்பட்டார். 2024-ல் மோடி உலகத்துக்கு தேவைப்படுகிறார். செயற்கையாக மின் தடையை ஏற்படுத்தி, பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. மாற்றம் வேண்டும் என்பதற்காகவே உங்கள் முன் வேட்பாளராக நிற்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.