< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சி...முதல்-மந்திரி நாளை தேர்வு
நாடாளுமன்ற தேர்தல்-2024

ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சி...முதல்-மந்திரி நாளை தேர்வு

தினத்தந்தி
|
10 Jun 2024 2:30 PM IST

ஒடிசா மாநிலத்தின் புதிய முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளின் பதவியேற்பு விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 147 சட்டசபை தொகுதிகளில் பா.ஜனதா 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் 51 இடங்களை மட்டும் பிடித்து, ஆட்சியையும் பறிகொடுத்தது. இது தவிர காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் ஒடிசாவில் முதல் முறையாக பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளது. நாளை மறுநாள் ( ஜூன் 12ம் தேதி) மாலை 8 மணியளவில் ஜனதா மைதானத்தில் ஒடிசா மாநிலத்தின் புதிய முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஒடிசாவின் புதிய முதல்-மந்திரியாக யாரை தேர்தெடுப்பது என்பது குறித்து பா.ஜ.க. தேர்வு குழுவை அமைத்துள்ளது. மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், புபேந்திர யாதவ் ஆகியோரை பா.ஜ.க. தலைமை நியமித்துள்ளது. நாளை நடைபெற உள்ள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்கு முன்பு அம்மாநில தலைநகரில் வாகன பேரணி நடத்துகிறார். இந்த பேரணி ஜெயதேவ் விஹாரில் தொடங்கி புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா நடைபெறும் இடமான ஜனதா மைதானத்தில் முடிவடையும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். பதவியேற்பு விழாவில் பிரதமரை தவிர, பா.ஜ.க.வின் சில முதல்-மந்திரிகள் உள்பட பல கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்