பா.ஜ.க.வை விட ஆபத்தானவர் நிதிஷ் குமார் : மல்லிகார்ஜுன கார்கே
|நாட்டில் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கு தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் முக்கியமானவை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பாட்னா,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது,
"பிரதமர் மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையை காட்டி வருகிறார். அவர் சொல்வதையே கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பா.ஜ.க. தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திர போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க. களமிறங்கியது.
நாட்டில் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கு தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியடைந்தால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.
பீகாரில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமார் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நிதிஷ் குமார் விலகியதை ஒரு அதிர்ஷ்டம் என நான் சொல்கிறேன். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.ஐ விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். அவரிடம் கொள்கைகள் இல்லை. அதிகாரத்துக்காக மட்டுமே நிதிஷ் குமார் கவலைப்படுகிறார்" என்றார்.