காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு புதிய அந்தஸ்து; பிரதமர் மோடிக்கு நன்றி - ப.சிதம்பரம் பதிவு
|முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு பிறகு காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு புதிய அந்தஸ்து கிடைத்துள்ளதாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு பிறகு காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு புதிய அந்தஸ்து கிடைத்துள்ளதாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"மோடி அரசு போய்விட்டது. சில நாட்களாக பா.ஜ.க. அரசு இருந்தது. நேற்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வந்துவிட்டது. ஏப்ரல் 19-ந்தேதிக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றத்தை கவனித்தீர்களா? கடந்த 5-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி புறக்கணித்து வந்தார். ஆனால் 19-ந்தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு நன்றி."
இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.