< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
Narendra Modi lost the right to form Govt P Chidambaram
நாடாளுமன்ற தேர்தல்-2024

'ஆட்சி அமைக்கும் உரிமையை நரேந்திர மோடி இழந்துவிட்டார்' - ப.சிதம்பரம்

தினத்தந்தி
|
5 Jun 2024 3:48 AM GMT

ஆட்சி அமைக்கும் உரிமையை நரேந்திர மோடி இழந்துவிட்டார் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் பா.ஜனதா தனித்து 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 'இந்தியா' கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும்.

இந்த நிலையில் ஆட்சி அமைக்கும் உரிமையை நரேந்திர மோடி இழந்துவிட்டார் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மரபுகளின்படி, தனது கட்சியை தோல்விக்கு அழைத்துச் சென்ற பிரதமர் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும். 303 இடங்களை வைத்துக்கொண்டு 370 இடங்களைக் கைப்பற்றும் இலக்குடன் களமிறங்கிய அக்கட்சிக்கு 240 இடங்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்க தோல்வியாகும்.

நரேந்திர மோடி ஆட்சி அமைக்கும் உரிமையை இழந்துள்ளார். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டும் மக்களின் முக்கிய கவலைகள் என்பதை மோடி ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற இரட்டைச் சவால்களை மோடியின் தலைமையிலான அரசால் சமாளிக்க முடியாது. மோடி ஆட்சியில் இரண்டுமே மோசமாகிவிட்டது.

மோடி அரசை மாற்றி புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் தீர்ப்பு. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து புதிய ஆட்சிக்கு வழி வகுக்கக் கடமைப்பட்டுள்ளன."

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்