< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி
நாடாளுமன்ற தேர்தல்-2024

நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி

தினத்தந்தி
|
24 April 2024 11:09 AM IST

பிரதமர் மோடிக்கு தேர்தலில் மகளிர் பதிலடி தருவார்கள் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது.

55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'தாலி' என்ற உங்கள் தங்கத்தை யாராவது பறித்தார்களா? போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திரா காந்தி தனது தங்கத்தை நாட்டுக்கு வழங்கினார். என் தாயும் அவர் தாலியை இந்த நாட்டிற்காக அர்ப்பணித்தார். பிரதமர் இதனை எதையும் அறியாமல் பேசுகிறார். பெண்களின் உணர்வுகள் மோடிக்கு தெரியாது. பணமதிப்பிழப்பு காரணமாக பல்வேறு பெண்களின் தாலிகள் அடகு கடைகளில் இருந்தன. பல பெண்களின் திருமணங்கள் நகைகள் இல்லாததால் நின்றது; அப்போது பிரதமர் எங்கு சென்றார்?. பிரதமர் மோடி கொச்சையான அரசியலை பேசி வருகிறார், மோடிக்கு தேர்தலில் பதிலடியை மகளிர் தருவார்கள்" என்றார்.

இதற்கு முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் கடந்த 21ம் தேதி அன்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைவரின் சொத்துகளும் கணக்கெடுக்கப்படும். தாய்மார்கள், சகோதரிகளுக்கு சொந்தமான தங்கத்தை கணக்கிட்டு பின்னர் அதை மறுவிநியோகம் செய்யும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்கள் தாலியை கூட விடமாட்டார்கள்" என்றார்.

பிரதமரின் இந்த பேச்சு தவறானது என்றும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இப்படி ஒரு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை கூட பறித்து விடுவார்கள் என்ற விமர்சனத்துக்கு பதிலடியாக பிரியங்கா காந்தி, தனது தாயின் தாலி இந்த நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்