மோடி நாட்டின் பிரதமர் அல்ல... பா.ஜனதா கட்சியின் பிரதமர் - சரத்பவார் தாக்கு
|மோடியின் பேச்சுகள் அவரை பா.ஜனதாவின் பிரதமராக முன்னிறுத்துகின்றன, நாட்டின் பிரதமராக இல்லை என்று சரத் பவார் தெரிவித்தார்.
மும்பை,
மராட்டியத்தில் இந்தியா கூட்டணி சார்பில் அவுரங்காபாத் நாடாளுமன்ற தொகுதியில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா வேட்பாளர் சந்திரகாந்த் கைரே மற்றும் ஜல்னாவில் காங்கிரஸ் வேட்பாளர் கல்யாண் காலே ஆகியோரை ஆதரித்து தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், "நான் இங்கு வருவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தேன். பிரதமர் முழு நாட்டிற்கும் சொந்தமானவர். ஆனால் அவரது பேச்சை கேட்டால், அவர் நாட்டிற்கான பிரதமர் அல்ல. பா.ஜனதாவின் பிரதமர் என்று தோன்றுகிறது.
பிரதமர் நாட்டிற்காக என்ன செய்ய போகிறோம் என்பதை மக்களிடம் தெரிவிக்கவேண்டும். அவர் அதை விட்டுவிட்டு சில நேரங்களில் முன்னாள் பிரதமர் ஜவர்கர்லால் நேருவை விமர்சிக்கிறார். சில நேரங்களில் ராகுல்காந்தியையும் மற்றும் என்னையும் விமர்சிக்கிறார். நேரு தனது வாழ்நாளில் 10 ஆண்டுகளை ஆங்கிலேயர்களுக்கு எதிராக சிறையில் கழித்தார். அவர் அறிவியலை ஊக்குவித்தார்.
சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கை, இந்தியாவில் கல்லூரியிலிருந்து வெளிவரும் 100 மாணவர்களில் 87 பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று கூறுகிறது. மராட்டியத்தின் பிற பகுதிகளை போலவே மரத்வாடாவிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆனால் இந்த நிலைமையை சீர்செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு நேரமில்லை" என்று அவர் கூறினார்.