< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பாகிஸ்தானின் அணுகுண்டுகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்: இது மோடி அரசு - அமித்ஷா சூளுரை
நாடாளுமன்ற தேர்தல்-2024

பாகிஸ்தானின் அணுகுண்டுகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்: 'இது மோடி அரசு' - அமித்ஷா சூளுரை

தினத்தந்தி
|
19 May 2024 5:07 AM IST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்

லலித்பூர்,

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், 'பாகிஸ்தான் இறையாண்மை கொண்ட நாடு. அந்த நாட்டை இந்தியா மதிக்க வேண்டும். அவர்களிடம் அணு குண்டு இருக்கிறது. முட்டாள் ஒருவர் அங்கு ஆட்சிக்கு வந்து, இந்தியாவுக்கு ஏதிராக அதை பயன்படுத்தினால் நாமும் பாதிக்கப்படுவோம்' என கூறியிருந்தார்.

இந்த பழைய வீடியோ தற்போது வெளியாகி தேர்தல் பிரசார களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் மணிசங்கரின் கருத்தை ஏற்கவில்லை என காங்கிரஸ் தலைமை அறிவித்தது. எனினும் மணிசங்கர் அய்யரின் இந்த கருத்தை பா.ஜனதாவினர் தீவிரமாக எடுத்து தேர்தல் பிரசாரங்களில் காங்கிரசை குறை கூறி வருகின்றனர்.

அந்தவகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மீண்டும் இந்த கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரசை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக உத்தரபிரதேசத்தின் லலித்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "உத்தரபிரதேசத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி இங்குள்ள பண்டல்கண்ட் பிராந்தியத்தில் ராணுவ உற்பத்தி தளம் ஒன்றை நிறுவி உள்ளார். தற்போது பீரங்கி குண்டுகளை தயாரிக்கும் இடமாக உத்தரபிரதேசம் மாறி இருக்கிறது.

பாகிஸ்தான் ஏதாவது தவறு செய்தால், பண்டல்கண்டில் தயாரிக்கப்படும் பீரங்கி குண்டுகளை கொண்டு அந்த நாட்டை அழித்து விடுவோம். பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் அந்த நாட்டை மதிக்க வேண்டும் எனவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கேட்கக்கூடாது என்றும் மணிசங்கர் அய்யர் கூறியிருக்கிறார். ஆனால் இது நரேந்திர மோடி அரசு. அணுகுண்டுகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அப்படியே இருக்கும். நாங்கள் அதை எடுப்போம். இந்த நிலம் முகலாயர்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய பகுதி. தற்போது பண்டல்கண்ட் கூட உள்நாட்டில் இருக்கும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட வேண்டியிருக்கிறது" என்று அமித்ஷா கூறினார்.

மேலும் செய்திகள்