கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம்
|கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
குமரி,
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும், தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று குமரி மாவட்டம் வருகிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டத்துக்கு வருகிறார். மாலை 4 மணி அளவில் குழித்துறையில் திறந்த வேனில் நின்றவாறு, நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அவர் நாகர்கோவில் வேப்பமூடு பொன்னப்ப நாடார் திடலில் மாலை 5 மணி அளவில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து பேசுகிறார். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை மாவட்டத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார்.