< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மெட்ரோ பணிகள் தாமதம் - மத்திய அரசே காரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தேர்தல்-2024

மெட்ரோ பணிகள் தாமதம் - மத்திய அரசே காரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
15 April 2024 7:41 PM IST

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.10 லட்சம் கோடி கொடுத்ததாக பச்சை பொய் சொல்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மாதவரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தின் நுழைவு வாயிலான தொண்டை மண்டலத்திற்கு வந்துள்ளேன். தி.மு.க.,வுக்கும் வட சென்னைக்குமான உறவும், தாய்க்கும் சேய்க்குமான உறவு. இது மிக முக்கியமான தேர்தல், இந்தியாவில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல்.

பா.ஜ.க.வும் பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா? அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? ஆர்.எஸ்.எஸ்-ன் சட்டம் இருக்க வேண்டுமா? இடஒதுக்கீடு வேண்டுமா என்பதை தீர்மானிக்கப்போவது உங்களின் வாக்குதான்.

பிரதமர் மோடி இரவுகளில்தான் சட்டம் கொண்டு வருவார். அப்படி திடீரென ஓர் இரவில்தான் ஊழலை ஒழிக்க வந்த அவதாரப்புருஷனாக டிவியில் தோன்றி பணமதிப்பிழப்பை அறிவித்தார். பொருளாதாரப் புலி மாதிரி ஜி.எஸ்.டி சட்டத்தை கொண்டு வந்து தொழில் முனைவோரையும், நடுத்தர மக்களையும் கொடுமைப்படுத்தினார் மோடி.

மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம். திமுக-காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஹீரோ, பா.ஜ.க தேர்தல் அறிக்கையானது மக்களுக்கு வில்லன். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை ஒரு காபி பேஸ்ட் மட்டுமே.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன்.சானிட்டரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. வரி போட்டதுதான் பா.ஜ.க. அரசு. செய்த சாதனைகள் என சொல்ல பா.ஜ.க.,விடம் எதுவும் இல்லை. சென்னையில் 3-வது ரெயில் முனையம், பழவேற்காடு- கடம்பாக்கம் வரை மேம்பாலம் அமைக்கப்படும். மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம்.

அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வைத்து மிரட்டி வசூல் செய்யும் வசூல் ராஜாவாக பிரதமர் மோடி உள்ளார். இலங்கை மீனவர்கள் கைதை மோடி கண்டிக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கவில்லை.

மெட்ரோ பணிகள் தாமதமாக நடைபெறுவதற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்காததே காரணம். மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. மற்றவர்கள் உண்ணும் உணவை விமர்சிக்கிறார் பிரதமர் மோடி.உணவு என்பது தனி மனிதரின் விருப்பம். அடுத்தவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்ய முடியாது.

தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பு திட்டத்தையாவது பிரதமர் மோடி செய்தாரா? வெள்ள பாதிப்புக்கு கூட மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.10 லட்சம் கோடி கொடுத்ததாக பச்சை பொய் சொல்கிறார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்