வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மன்சூர் அலிகான் படுதோல்வி
|வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவு மன்சூர் அலிகானுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்,
வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு 'பலாப்பழம்' சின்னம் கிடைத்தது. பலாப்பழத்துடன் தொகுதியை சுற்றி மன்சூர் அலிகான் வலம் வந்தார். சினிமாவில் வில்லன் தோற்றத்திலும் வந்து மிரட்டியவர் தேர்தல் பிரசாரத்தை கலகலப்பூட்டினார். 'ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' என்று நடிகர் மன்சூர் அலிகான் சீரியசாக சொல்லி வந்தார்.
இதற்கிடையே தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணையும் முயற்சியில் ஈடுபட்டு பரபரப்பை கிளப்பினார். தற்போது வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவு அவருக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 2,804 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு 54 ஆயிரத்து 957 வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.