மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவுக்கு 'ரசகுல்லா'தான் கிடைக்கும் - மம்தா பானர்ஜி
|மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை புறக்கணிக்குமாறு மம்தா பானர்ஜி மக்களை கேட்டுக்கொண்டார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் இந்த முறை அதிக இடங்களை பா.ஜனதா கைப்பற்றும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் கூறியிருந்தார். இதை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக மறுத்தார்.
பிரதமர் மோடி பேசிய அதே பரைபூர் மைதானத்தில் நேற்று நடந்த பிரசாரத்தில் கலந்து கொண்டு மம்தா பானர்ஜி பேசும்போது, 'மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அதிக இடங்களை பெறும் என மோடி கூறியதற்கு, அவர்கள் தோற்று விட்டனர் என்பதுதான் பொருள். இங்கு பா.ஜனதாவுக்கு ரசகுல்லாதான் (பூஜ்ஜியம்) கிடைக்கும்' என கிண்டலாக தெரிவித்தார்.
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் எனக்கூறிய மம்தா பானர்ஜி, ஆனால் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை புறக்கணிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். அவர்களுக்கு போடும் ஓட்டுகள் பா.ஜனதாவுக்குதான் பலனளிக்கும் என்றும் அவர் கூறினார்.
மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எந்த அரசியல் கட்சியோ, தேர்தலோ, சுதந்திரமோ, மதமோ, மனித நேயமோ, கலாசாரமோ இருக்காது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.