< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் - காங்கிரஸ் அறிவிப்பு

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தல்-2024

அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் - காங்கிரஸ் அறிவிப்பு

தினத்தந்தி
|
30 April 2024 2:29 AM IST

அமேதி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் எம்.பி.யாக இருந்த சோனியா இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே அந்த தொகுதியில் இந்தமுறை பிரியங்கா போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

இதைப்போல அமேதி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார். எனினும் இந்த முறை மீண்டும் அங்கு களமிறங்குவார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

எனவே இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பை கட்சி தொண்டர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத்திடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், 'அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் அதிகாரம் கட்சி தலைவர் கார்கேவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தேர்தல் ரகசியமாக நடைபெறுவதில்லை. வெளிப்படையாகவே நடைபெறுவதால், இதை அறிவிக்கும்போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்' என தெரிவித்தார்.

மேலும் அவர், 'எங்கள் கட்சியின் வேட்பாளர்களை பூட்டிய அறைக்குள் 2 பேர் மட்டும் தேர்வு செய்வதில்லை. தேர்தல் பணிக்குழு இது குறித்து ஆலோசனை நடத்தி, கட்சி தலைவருக்கு பரிந்துரைக்கும். அவர் ஒப்புதலுடன் வேட்பாளர் முடிவு செய்யப்படும்' என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்