< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தேர்தல் விதிமுறை மீறல்கள்.. சி-விஜில் ஆப் மூலம் இதுவரை 79,000 புகார்கள் பதிவு
நாடாளுமன்ற தேர்தல்-2024

தேர்தல் விதிமுறை மீறல்கள்.. சி-விஜில் ஆப் மூலம் இதுவரை 79,000 புகார்கள் பதிவு

தினத்தந்தி
|
29 March 2024 2:19 PM IST

பதிவு செய்யப்பட்ட மொத்த புகார்களில் 73 சதவீதம், அதாவது 58,000 புகார்கள், சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களுக்கு எதிரானவை ஆகும்.

புதுடெல்லி:

இந்தியாவில் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, நாடு முழுவதும் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. விதிமீறல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் சி-விஜில் (C-Vigil) என்ற செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்கின்றனர். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது.

அவ்வகையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 79,000-க்கும் மேற்பட்ட புகார்கள் வரப்பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சி-விஜில் செயலியில் பதிவு செய்யப்பட்ட புகார்களில் 99 சதவீத புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், 89 சதவீத புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் பதில் அளிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

"பதிவு செய்யப்பட்ட புகார்களில் 73 சதவீதம், அதாவது 58,000 புகார்கள், சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களுக்கு எதிரானவை ஆகும். ஓட்டுக்கு பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானம் வழங்கியதாக 1,400 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2,454 புகார்கள் வந்துள்ளன. துப்பாக்கிகளை காட்டி மிரட்டியதாக பெறப்பட்ட 535 புகார்களில், 529 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரசாரம் செய்ததாக 1,000 புகார்கள் வந்துள்ளன" என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டபோது, மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும், மாதிரி நடத்தை விதி மீறல்கள் மற்றும் வாக்காளர்களை கவரும் வகையில் பொருட்கள் விநியோகம் செய்தல் தொடர்பாக புகார் செய்வதற்கு சி-விஜில் செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்