< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மத்திய பிரதேசம்:  பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணம்; பிடல் தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைப்பு
நாடாளுமன்ற தேர்தல்-2024

மத்திய பிரதேசம்: பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணம்; பிடல் தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைப்பு

தினத்தந்தி
|
10 April 2024 4:31 PM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மரணம் அடைந்த நிலையில், மே 7-ந்தேதி மத்திய பிரதேசத்தின் பிடல் மக்களவை தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறும்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மத்திய பிரதேசத்தின் பிடல் மக்களவை தொகுதிக்கான வாக்கு பதிவு, வருகிற 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலின்போது நடைபெற உள்ளது.

இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் நேற்று மரணம் அடைந்து விட்டார். இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 52-ன்படி தேர்தல் ஒத்தி வைக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

தேர்தல் நடைபெறுவதற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்து விட்டால், புதிய வேட்பாளர் ஒருவரை அடையாளம் கண்டு, நிறுத்துவதற்கு கட்சிக்கு காலஅவகாசம் கொடுக்கும் வகையில் தேர்தல் ஒத்தி வைக்கப்படும்.

இதன்படி, இந்த தொகுதிக்கான வாக்கு பதிவானது, 3-வது கட்ட தேர்தலின்போது நடைபெறும். இதனை தொடர்ந்து, மே 7-ந்தேதி பிடல் தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்