'சுட்டெரிக்கும் சூரியனை தாமரை எதிர்க்கும்' - தமிழிசை சவுந்தரராஜன்
|எங்கள் வேலையே சூரியனை சமாளிப்பதுதான் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தென் சென்னை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கோடம்பாக்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் பிரசாரத்தில் ஈடுபடுவது கடினமாக உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது;-
"எங்கள் வேலையே சூரியனை சமாளிப்பதுதான். சூரியனால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. சுட்டெரிக்கும் சூரியனை தாமரை எதிர்த்து நிற்கும். காலையில் வெகு சீக்கிரமாகவே பிரசாரத்தை தொடங்கி விடுகிறோம். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் தேர்தல் பிரசாரத்தால் இடையூறு ஏற்படக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். மக்கள் ஒரு மாறுபட்ட நாடாளுமன்ற உறுப்பினரை பார்க்கப் போகிறார்கள். நான் என்றும் மக்களோடுதான் இருப்பேன்."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.