நாடாளுமன்ற தேர்தல்; தொகுதி கண்ணோட்டம் -தென்காசி (தனி)
|தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் முன்பு அம்பை, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகள் இடம் பிடித்திருந்தன.
தென்றல் தவழ்ந்து, சாரல் மழையும் தூவும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதி. இதில் சங்கரன்கோவில் (தனி), தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பிடித்துள்ளன.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் முன்பு அம்பை, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகள் இடம் பிடித்திருந்தன. 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது அம்பை, ஆலங்குளம் தொகுதிகள் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டன. அதற்கு பதிலாக தென்காசி (தனி) தொகுதியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதிகள் சேர்க்கப்பட்டன. தனி நாடாளுமன்ற தொகுதியாக இருக்கும் தென்காசி தொகுதிக்குள் 3 சட்டமன்ற தொகுதிகள் தனித்தொகுதிகளாக இடம் பிடித்துள்ளன.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். நாடார், தேவர், பிள்ளைமார், செங்குந்த முதலியார் சமுதாயத்தினரும் கணிசமாக உள்ளனர். தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர்.
9 முறை வென்ற காங்கிரஸ்
1957-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இடைத்தேர்தல் உள்பட 16 நாடாளுமன்ற தேர்தல்களை தென்காசி தொகுதி சந்தித்து உள்ளது. இந்த தொகுதியில் 9 முறை காங்கிரஸ் கட்சியும், ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசும், அ.தி.மு.க. 3 முறையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 2 முறையும், தி.மு.க. கடந்த முறையும் வெற்றி பெற்றுள்ளது.
1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய சங்கரபாண்டியன் முதல் வெற்றியை பதித்தார். 1962-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி.சாமியும், 1967-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.எஸ்.ஆறுமுகமும் வெற்றி பெற்றனர்.
1971-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எம்.செல்வமணியும், 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அருணாசலமும் வெற்றி கண்டனர். 1980, 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் அருணாசலம் வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார்.
அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வந்த ஜி.கே.மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிட்ட அருணாசலம் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றார்.
இதுவரை காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி கண்ட தென்காசி தொகுதியில் 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்த தென்காசி தொகுதியை அ.தி.மு.க. தகர்த்து தன்வசமாக்கியது. இங்கு அ.தி.மு.க வேட்பாளர் முருகேசன் வெற்றி பெற்றார். 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வேட்பாளர் முருகேசன் வெற்றிவாகை சூடினார்.
2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் அப்பாத்துரை வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் லிங்கம் வென்றார். இந்த தொகுதியில் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு 2 முறை வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வசந்தி முருகேசன் வெற்றி பெற்றார்.
முதல் முறையாக வென்ற தி.மு.க.
2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் 4,70,346 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 3,54,216 ஓட்டுகள் பெற்றார்.
போக்குவரத்து நெருக்கடி
தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால் தென்காசி நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ளது. குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் மற்றும் தூத்துக்குடி-கொல்லம் இடையிலான வணிக போக்குவரத்து ஆகியவற்றால் தென்காசி கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதை தீர்க்க தென்காசி ஆசாத் நகரில் இருந்து 'ரிங் ரோடு' அமைக்கும் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
சிவகிரி தாலுகா மேற்கு தொடர்ச்சி மலையில் செண்பகவல்லி அணைக்கட்டு உள்ளது. இந்த அணை சேதம் அடைந்து விட்டதால் தண்ணீர் கேரளா பகுதிக்கு செல்கிறது. அந்த அணையை சீரமைத்து தென்காசி மாவட்டத்துக்கு தண்ணீரை கொண்டு வர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. சங்கரன்கோவில், ராஜபாளையம் தொகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். குறைந்தபட்ச ஊதியம், மூலப்பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
புளியங்குடியில் எலுமிச்சை சாகுபடியும், சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதியில் மலர் சாகுபடியும் உள்ளது. இதை பாதுகாக்க குளிர்பதன கிட்டங்கி வசதி செய்து தரவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தனுஷ்குமார் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் மற்றும் அவர்கள் பெற்றிருந்த ஓட்டுகள் விவரம் வருமாறு:-
தனுஷ்குமார் (தி.மு.க) 4,70,346
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) 3,54,216
பொன்னுத்தாய் (அ.ம.மு.க.) 91,130
இசை மதிவாணன் (நாம் தமிழர் கட்சி) 58,855
முனீஸ்வரன் (மக்கள் நீதிமய்யம்) 23,844
வாக்காளர்கள் விவரம்
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 7,42,158, பெண்கள் 7,73,822, மூன்றாம் பாலினத்தவர் 203 பேர் உள்ளனர்.
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்க விவரம் வருமாறு:-
தென்காசி 2,92,600
கடையநல்லூர் 2,79,438
வாசுதேவநல்லூர் (தனி) 2,44,009
சங்கரன்கோவில் (தனி) 2,46,145
ராஜபாளையம் 2,20,893
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) 2,33,098