நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- விருதுநகர்
|தொகுதி மறு சீரமைப்புக்கு முன்னர், விருதுநகர் தொகுதியானது சிவகாசி தொகுதியாக இருந்துள்ளது.
அரசியல் வரலாற்றை தேசிய அளவிலும், தமிழக அளவிலும் தீர்மானித்ததில் விருதுநகர் மாவட்டத்துக்கு முக்கிய இடம் உண்டு. விருதுப்பட்டியில் (விருதுநகர்) பிறந்து, காங்கிரசில் இணைந்து, தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்து, பின்னர் தேசிய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தவர், பெருந்தலைவர் காமராஜர்.
இதே போல் முன்னாள் முதல்-அமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜா, தியாகி சங்கரலிங்கனார், தியாகி விஸ்வநாத தாஸ் உள்ளிட்ட தலைவர்களையும் தந்த மாவட்டம் இது. தேசம் சுதந்திரம் அடைந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களவை தொகுதி இருந்த நேரத்தில், பெருந்தலைவர் காமராஜர் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
சிவகாசி தொகுதி
தொகுதி மறு சீரமைப்புக்கு முன்னர், விருதுநகர் தொகுதியானது சிவகாசி தொகுதியாக இருந்துள்ளது. 1967- தேர்தலில் ராமமூர்த்தி (சுதந்திரா கட்சி), 1971, 1977-ல் ஜெயலட்சுமி (காங்கிரஸ்), 1980, 1984-ல் நல்லவன் என்ற சவுந்தரராஜன் (அ.தி.மு.க.), 1989-ல் கா.காளிமுத்து (அ.தி.மு.க.), 1991-ல் டாக்டர் கனக கோவிந்தராஜுலு (அ.தி.மு.க.), 1996-ல் அழகிரிசாமி (இந்திய கம்யூனிஸ்டு), 1998, 1999-ல் வைகோ (ம.தி.மு.க.), 2004-ல் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் (ம.தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
1967-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 2 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், ம.தி.மு.க. 3 முறையும், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் சுதந்திரா கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. சிவகாசி மக்களவை தொகுதியாக இருந்தபோது, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இத்தொகுதியில் இடம் பெற்று இருந்தன.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியாக உருவான பின்னர், கோவில்பட்டி தொகுதியானது, தூத்துக்குடியுடன் இணைக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் தென்காசி (தனி) மக்களவை தொகுதியுடன் இணைக்கப்பட்டன.
விருதுநகர் தொகுதி உதயம்
விருதுநகர், சாத்தூர், சிவகாசி ஆகியவற்றுடன், அருப்புக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகள் இணைக்கப்பட்டு, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியாக உதயமானது.
2008-ல் நடந்த தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உருவாகி 2009-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். அவரே இத்தொகுதியின் முதல் எம்.பி. ஆவார். அவரை எதிர்த்து ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வைகோ, 15,764 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். வைகோ 2-வது இடம் பிடித்தார். இந்த தேர்தலில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. இதில் மாணிக்கம் தாகூரும் (காங்கிரஸ்) தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வெற்றி
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 4 லட்சத்து 64 ஆயிரத்து 667 வாக்குகள் பெற்றார். தே.மு.தி.க. சார்பில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட அழகர்சாமி 3 லட்சத்து 15 ஆயிரத்து 55 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட பரமசிவ அய்யப்பன் 1 லட்சத்து 7 ஆயிரத்து 33 வாக்குகள் பெற்றிருந்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட முனியசாமி 56 ஆயிரத்து 815 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அருள்மொழி தேவன் 52 ஆயிரத்து 591 ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.
சட்டசபை தேர்தலின் வெற்றி விவரம்
2021 சட்டமன்ற தேர்தைல எடுத்துக்ெகாண்டால் விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் தி.மு.க.வும், சிவகாசியில் காங்கிரசும், சாத்தூரில் ம.தி.மு.க.வும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன.
விருதுநகர் தொகுதியில் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் 4-வது முறையாக போட்டியிடுகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு இத்தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் களம் காண்கிறார். பா.ஜனதா சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் கவுசிக்கும் வேட்பாளராக நிற்கிறார்கள்.
பட்டாசு தொழில் சந்திக்கும் பிரச்சினைகள்
விருதுநகர் தொகுதியில் முக்குலத்தோர், நாயக்கர், நாடார், ஆதிதிராவிடர், மூப்பர், செட்டியார், ரெட்டியார், பிள்ளைமார், அருந்ததியர், சாலியர், விஸ்வகர்மா, சவுராஷ்டா உள்ளிட்ட சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. பட்டாசு தொழிலில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படுமா? என அந்த தொழிலில் உள்ளவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விருதுநகர்-சாத்தூர் இடையே மேம்பாலங்கள் கட்டும் பணி முடங்கியுள்ளது. 2022-ம் ஆண்டிற்குள் முன்னேறிய மாவட்டமாக விருதுநகர் உருவாகும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் மாவட்டம் முன்னேறி உள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குள்தான் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வருகிறது.
மதுரை எய்ம்ஸ் அமையும் இடமானது விருதுநகர் மக்களவை தொகுதி எல்லைக்குள்தான் அடங்கி இருக்கிறது. 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் கட்டுமான பணி இன்னும் முழுவீச்சில் தொடங்கப்படாமல் உள்ளது. தி.மு.க. கூட்டணியில் 2019-ம் ஆண்டு இருந்ததை போலவே தற்போது எந்த மாற்றமும் இல்லாமல் கூடுதல் கட்சிகள் சேர்ந்துள்ளன. தே.மு.தி.க. மற்றும் பா.ஜனதா கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பலத்திலும், கூட்டணியின் ஆதரவிலும் களம்காண்கிறார்கள். வெற்றி யாருக்கு என்பது ஜூன் 4-ந் தேதி தெரியவரும்.
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி வாகை சூடினார். அந்த தேர்தலில் முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-
மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) 4,64,667
அழகர்சாமி (தே.மு.தி.க.) 3,15,055
பரமசிவ அய்யப்பன் (அ.ம.மு.க. 1,07,033
முனியசாமி (ம.நீ.ம) 56,815
அருள்மொழி தேவன் (நாம் தமிழர்) 52,591
வெற்றி யார் கையில்?
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என்பது தி.மு.க. கூட்டணியினரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜனதா வேட்பாளர் ராதிகாவும், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனும் நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மாணிக்கம் தாகூர் தொகுதியில் நன்கு அறியப்பட்டவர். ராதிகாவையும், விஜயபிரபாகரனையும் பிரசாரத்தில் காண மக்கள் ஆர்வமாக வருகிறார்கள். ஆனால், அனைத்தும் ஓட்டுகளாக மாறுமா? என்பது சந்தேகம் தான். இளைஞர்களை ஈர்க்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக் முனைப்பு காட்டுகிறார். அருப்புக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர் விஜயகாந்த். எனவே மண்ணின் மைந்தராக விஜயபிரபாகரன் பெருமிதம் கொள்கிறார். தான் வெற்றி பெற்றால் விருதுநகர் தொகுதியில் வீடு எடுத்து தங்குவேன் எனவும் வாக்காளர்களிடம் கூறுகிறார்.
ராதிகாவும் மக்களை கவர தீவிர பிரசாரத்தில் வீதிகள் தோறும் வருகிறார்.மிகப்பெரிய தி்ட்டங்களை கொண்டு வர வேண்டும், வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும். ஏற்கனவே அறிவித்த ஜவுளிப்பூங்காவுக்கான பணிகள் விரைந்து தொடங்கி மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும், ரெயில்வே திட்டங்கள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், எய்ம்ஸ் விரைவாக செயல்பாட்டுக்கு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவற்றை எல்லாம் செயல்படுத்துவதில் யாருடைய வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடுகிறதோ, அவர்கள் வெற்றி பெறுவார்கள்.