நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்-வேலூர்
|வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றிபெற்றுள்ளன
இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடைபெற்ற வேலூர் கோட்டை இன்றளவும் வேலூரின் பெருமையாக திகழ்கிறது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து 145 கிலோ மீட்டர் தூரத்திலும், உலகப்புகழ்பெற்ற ஆன்மிக தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 82 கிலோ மீட்டர் தொலைவிலும், வேலூர் மாநகரம் அமைந்துள்ளது. இது வேலூர் மாவட்டத்தின் தலை நகரமாகும்.
பாலாறு
தமிழ்நாட்டுக்கும்- கர்நாடகாவுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்துவரும் தண்ணீர் பிரச்சினைக்கு காரணமான பாலாறு கர்நாடகாவில் உற்பத்தியானாலும் தமிழ்நாட்டில் தான் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் தான் அதிக தூரம் ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையோரம் தான் வேலூர் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8-வது தொகுதியாக இருக்கும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி இதுவரை 17 பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளது. தற்போது 18-வது தேர்தலை சந்திக்கிறது.
முதலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் வேலூர், அணைக்கட்டு, கீழ்வழித்துணையான் எனப்படும் கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கின்றனர். அதேபோன்று கிறிஸ்தவர்கள், வன்னியர்கள், முதலியார்கள், ஆதிதிராவிடர்களும் அதிகளவில் உள்ளனர். இதுதவிர பல சமூக மக்களும் தொகுதி முழுவதும் பரவி உள்ளனர்.
தி.மு.க. அதிக முறை வெற்றி
வேலூர் நாடாளுமன்ற தொகுதி 1951-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. இதில் தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் அதிகமுறை வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 5 முறையும், அதன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 2 முறையும், பா.ம.க. 2 முறையும், என்.சி.ஓ., சி.டபிள்யூ.எல், சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.
1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்த போது முத்துகிருஷ்ணன் (காங்கிரஸ்), ராம்சந்தர் (சி.டபிள்யூ.எல்) ஆகியோர் வெற்றி பெற்றனர். 1957-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், என்.ஆர்.முனுசாமி ஆகியோர் வென்றனர். பின்னர் ஒரு உறுப்பினர் தொகுதி ஆனது. 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்துல்வாஹித் (காங்கிரஸ்) 1,14,872 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1967 தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட குசேலர் 2,03,887 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1971 தேர்தலில் ஆர்.பி.உலகநம்பியும் (தி.மு.க.) 2,21,512 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடினார்.
1977 தேர்தலில் வி.தண்டாயுதபாணி (ஐ.என்.சி.(ஓ))2,20,994 வாக்குகளும், 1980 தேர்தலில் ஏ.கே.ஏ.அப்துல்சமத் (சுயேச்சை) 2,32,567 வாக்குகளும் பெற்று வென்றனர். 1984 தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 2,84,416 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1989 தேர்தலில் அப்துல்சமது 3,56,637 வாக்குகளும், 1991 தேர்தலில் அக்பர்பாஷா 3,83,177 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். 1996 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பி.சண்முகம் வெற்றி பெற்றார். 1998 தேர்தலில் 3,31,035 வாக்குகளும், 1999 தேர்தலில் 3,24,547 வாக்குகளும் பெற்று பா.ம.க. சார்பில் போட்டியிட்ட என்.டி.சண்முகம் வெற்றி பெற்றார்.
2004-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த கே.எம்.காதர்மொய்தீன் 4,36,642 வாக்குகளும், 2009 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல்ரகுமான் 3,60,474 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.செங்குட்டுவன் 3,83,719 வாக்குகளும், 2019 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும் பெற்று வெற்றிவாகை சூடினர். அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார்.
மீண்டும் போட்டி
இந்த தேர்தலிலும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், பா.ஜனதா சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் மீண்டும் களம் காண்கின்றனர். இவர்களுடன் அ.தி.மு.க. சார்பில் டாக்டர் எஸ்.பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் என்ஜினீயர் மகேஷ் ஆனந்த் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர நடிகர் மன்சூர்அலிகானும் வேலூர் தொகுதியில் மனுதாக்கல் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.
தீர்க்கப்படாத பிரச்சினைகள்
பாலாற்றில் வெள்ளம் வரும்போது நேராக கடலில் சென்று கலக்கிறது. எனவே தண்ணீரை சேமித்து வைக்க பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டவேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது.
பேரணாம்பட்டு பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு பத்தலப்பல்லி அணை ரூ.38½ கோடியில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு அணை கட்டும் பணி அப்படியே நிலுவையில் உள்ளது. இந்த அணையை கட்டிமுடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
அதேபோன்று குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் குடியாத்தத்திற்கு குட்டி சிவகாசி என்ற பெயரும் உள்ளது. கிராமப்புற பகுதிகளில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்க வேண்டும். கே.வி.குப்பத்தில் மருத்துவமனை, கோர்ட்டு, தீயணைப்பு நிலையம், அரசு மகளிர் கல்லூரி ஏற்படுத்த வேண்டும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். வாணியம்பாடி நியு டவுன் ரெயில்வே மேம்பாலம் கட்டவேண்டும், வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அதில் சிப்காட் அமைக்க வேண்டும், தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் அதிகம் உள்ளதால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டு வரவேண்டும், என்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது.
அதே போன்று அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் மேல் அரசம்பட்டு அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
வெற்றி யார் கையில்?
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாணியம்பாடி தொகுதியில் அ.தி.மு.க.வும், கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியும் வெற்றிபெற்றுள்ளன. மற்ற 4 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2 முறை தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளார். கடந்த தேர்தலில் சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததால் இந்த முறை எப்படியாவது வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற உத்வேகத்தில் தேர்தல்பணி செய்து வருகிறார்.
இதற்காக தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே மருத்துவ முகாம்கள், வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தினார். வேலை வாய்ப்பு மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளார்.ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இலவச திருமண மண்டபம் கட்டித்தருவதாக கூறி உள்ளார். வேலூரில் ரூ.1 கோடியில் இலவச திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டியிருக்கிறார். வெற்றிபெற்றால் மருத்துவமனை கட்டித்தருவதாக கூறியிருக்கிறார். தி.மு.க. வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு செய்த சாதனைகள், தி.மு.க. அரசு செய்துள்ள திட்டங்களை கூறி, தொகுதியை தக்கவைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த முறை பா.ஜனதா கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. தற்போது அதில் இருந்து வெளியேறி தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. வேட்பாளராக அரசு டாக்டர் பசுபதி களம் காண்கிறார். இவர்களுடன் நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த், சுயேட்சையாக நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். எனவே வேலூர் தொகுதி இந்த தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் பெற்ற வாக்குவிவரம் வருமாறு:-
கதிர்ஆனந்த் (தி.மு.க.)- 4,85,340
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க.கூட்டணி)- 4,77,199
தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி)-26,995
வாக்காளர்கள் விவரம்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 15,09,964 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள்- 7,31,831. பெண் வாக்காளர்கள் 7,77,922. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 211 பேர் உள்ளனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு:-
வேலூர்:2,44,542
அணைக்கட்டு:2,57,486
கே.வி.குப்பம்:2,31,140
குடியாத்தம்:2,92,674
வாணியம்பாடி:2,48,712
ஆம்பூர்:2,35,410
பணம் பிடிபட்டதால் நின்ற தேர்தல்
2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர். காட்பாடி பகுதியில் ஒரு வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க ஓட்டு சிலிப்புடன் ரூ.11 கோடி பதுக்கி வைத்திருந்த பணம் பிடிபட்டது. அதனால் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. பின்னர் 5-8-2019 அன்று தனியாக தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும் இவர்கள் இருவரும் போட்டியிட்டனர். அதில் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார்.