< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்:  தொகுதி கண்ணோட்டம்- தேனி
நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- தேனி

தினத்தந்தி
|
4 April 2024 2:19 PM IST

தேனி தொகுதி உருவாகும் முன்பு வரை பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தது.

தென்மேற்கு பருவமழை சாரலாய் தூற, ஏலக்காய் மணம் வீசும் தொகுதி தேனி. தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 33-வது தொகுதி இது. ஒருபக்கம் வளமும், மற்றொருபுறம் வறட்சியுமாக அமையப்பெற்ற பகுதிகளை கொண்டது இந்த தொகுதி.

2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது தேனி நாடாளுமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதில், தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளும் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

அ.தி.மு.க.வின் தோல்வி

தேனி தொகுதி உருவாகும் முன்பு வரை பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தது. பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி 1952-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை 14 பொதுத்தேர்தல்கள், ஒரு இடைத்தேர்தலை சந்தித்துள்ளது. இதில், அ.தி.மு.க. (இடைத்தேர்தல் உள்பட) 7 முறையும், காங்கிரஸ் 4 முறையும், தி.மு.க. 2 முறையும், சுதந்திரா கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2004-ம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோதும், காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண் ரசீத், அ.தி.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்.

தேனி தொகுதியாக உருவான பின்னர் 3 முறை பொதுத்தேர்தலை சந்தித்து உள்ளது. 2009-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை வீழ்த்தி, தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண் ரசீத் வெற்றி பெற்றார்.

தொடர் வெற்றி

தொடர் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. தொடர் வெற்றி பெற்றது. 2014-ல் தி.மு.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை 3 லட்சத்து 14 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பார்த்திபன் இமாலய வெற்றியை பதிவு செய்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆனால், அ.தி.மு.க. வெற்றி பெற்ற ஒரே தொகுதி தேனி மட்டுமே. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத் களம் இறங்கினார். மற்றொரு புறம் அ.ம.மு.க. வேட்பாளராக தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டார். இதில் ப.ரவீந்திரநாத் 5 லட்சத்து 4 ஆயிரத்து 813 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தீர்க்கப்படாத பிரச்சினைகள்

இந்த தொகுதியில் முக்குலத்தோர் சுமார் 27 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 20 சதவீதமும், கவுண்டர் 8 சதவீதமும், நாயுடு 8 சதவீதமும், பிள்ளைமார் 7 சதவீதமும், செட்டியார் 6 சதவீதமும், நாடார் 4 சதவீதமும், முஸ்லிம் 4 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 2 சதவீதமும், இதர சமுதாயத்தினர் சுமார் 14 சதவீதமும் உள்ளனர்.

இந்த தொகுதியில் தீர்க்கப்படாத நீண்டகால பிரச்சினைகள் ஏராளம் உள்ளன. விவசாயமே இந்த தொகுதி மக்களின் பிரதான தொழில். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை இந்த தொகுதியின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. தீர்ப்பு வந்து 10 ஆண்டுகள் முழுமைபெறவுள்ள நிலையில் இன்னும் பேபி அணையை பலப்படுத்துவதற்கான எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.

விவசாயிகள்-நெசவாளர்கள்

வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை போன்ற அணைகளை தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 1989-ம் ஆண்டு போடி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தபோது, குரங்கணி-டாப்ஸ்டேஷன் இடையே மலைச்சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று வரை சாலை அமைக்கப்படவில்லை. இதேபோல், சாக்குலூத்து மெட்டுச்சாலை, போடி-அகமலை மலைச்சாலை திட்டங்களும் மக்களின் நீண்டகால கோரிக்கை நிலையிலேயே கிடப்பில் கிடக்கின்றன.

ஆண்டிப்பட்டி பகுதிகளில் வறட்சியை போக்குவதற்கு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலேயே மாவூற்றுவேலப்பர் கோவில் அருகில் திப்பரேவு அணை கட்டுவதற்கும், மூலவைகையில் அணை கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டது. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மக்களின் கனவு திட்டமான இந்த அணைகள் கட்டும் திட்டம் இன்றளவிலும் கைகூடவில்லை. ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த டி.சுப்புலாபுரத்தில் வைகை உயர்தொழில் நெசவு பூங்கா திட்டம் குறித்து 19 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. கட்டுமான பணிகள் கூட முழுமை பெறாமல் அந்த திட்டம் முடங்கிக் கிடக்கிறது.

வேலைவாய்ப்புகள்

பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த போடி- மதுரை அகல ரெயில்பாதை திட்டப் பணிகள் முழுமை பெற்று ரெயில் இயக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை-போடி இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் ரெயிலை தினமும் இயக்க வேண்டும். தற்போதைய போடி -மதுரை ரெயில் தினமும் காலை மதுரையில் இருந்து புறப்பட்டு தேனி க்கு வருகிறது. மாலை தேனியில் இருந்து மதுரைக்கு செல்கிறது. அதேபோல், காலை நேரத்தில் தேனியில் இருந்து மதுரைக்கும், மாலை நேரத்தில் மதுரையில் இருந்து தேனிக்கும் ரெயில் சேவை தொடங்க வேண்டும். திண்டுக்கல்-குமுளி அல்லது திண்டுக்கல்-சபரிமலை ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்பதும் அரைநூற்றாண்டு கால கோரிக்கையாக உள்ளது.

போடி, கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாததால் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள ஏலக்காய், மிளகு, காபி தோட்டங்களுக்கு கூலிவேலைக்கு சென்று வருகின்றனர். ஜீப்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி உயிரையும், கை, கால் என உடல் உறுப்புகளையும் இழக்கும் துயரம் நிகழ்கிறது. எனவே, அவர்களுக்கு தேனி மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்க தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியை தேனியில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைக்கப்படவில்லை. இதுபோன்று தேனி நாடாளுமன்ற தொகுதியில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத அடுக்கடுக்கான பிரச்சினைகள் ஏராளம் உள்ளன.

வெற்றி யார் கையில்?

பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தவரை தி.மு.க. 1996-ல் நேரடி வெற்றி பெற்றது. தேனி நாடாளுமன்ற தொகுதியாக உருவான பின்னர் நடந்துள்ள 3 தேர்தல்களில் 2014-ல் மட்டுமே தி.மு.க. போட்டியிட்டது. அதில் தோல்வியை தழுவியது. 2 முறை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை கொடுத்தது. அதில் காங்கிரஸ் 2009-ல் வெற்றியும், 2019-ல் தோல்வியும் அடைந்தது.

இந்த தேர்தலில் தி.மு.க. மீண்டும் நேரடி களத்தில் இறங்கி உள்ளது. தி.மு.க. வேட்பாளராக தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். 2 தொடர் வெற்றிகளை பெற்ற அ.தி.மு.க.வும் உத்வேகத்துடன் தனது கட்சியின் சார்பில் வி.டி.நாராயணசாமியை நிறுத்தியுள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். டி.டி.வி.தினகரன் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது, 1999-ல் வெற்றியும், 2004-ல் தோல்வியும் அடைந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் ஏற்கனவே இதே தொகுதியில் 2009-ல் அ.தி.மு.க. வேட்பாளராகவும், 2019-ல் அ.ம.மு.க. வேட்பாளராகவும் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். தற்போது தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் நிலையில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவரும், தேனியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று தி.மு.க.வினரும் தீவிரமாக முயற்சிக்கின்றனர். இதனால், தேனியில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. என மும்முனைப் போட்டி பலமாக உள்ளது. அவர்களோடு நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் மதன் வேட்பாளராக களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார்.

கடந்த முறை அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ப.ரவீந்திரநாத் எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்து தொகுதி மக்களிடம் கேட்டபோது, 'மந்தமாக நடந்த மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டப் பணிகளை துரிதப்படுத்தினார் என்று சொல்லிக் கொள்வதை தவிர, பெரிய அளவிலான திட்டங்கள் எதையும் மாவட்டத்திற்கு கொண்டு வரவில்லை. முதல் 3 ஆண்டுகளில் தொகுதிக்குள் அதிகம் அவரை பார்க்க முடியவில்லை. 2 ஆண்டுகளாக தான் தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்தும் பணிகளை தொடங்கி வைக்கும் பணிகளில் ஆர்வம் காட்டினார். வெற்றி பெற்றவுடன் மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க செல்போன் செயலியை அறிமுகம் செய்தார். அது என்ன ஆனது என்றே தெரியவில்லை' என்றனர். தேனி தொகுதியில் 2½ லட்சத்துக்கும் மேல் இளம் வாக்காளர்கள் உள்ளனர். கடுமையான போட்டிக்கு இடையே யார் வெற்றி பெறுவார் என்பது வாக்காளர்களின் கையில் உள்ளது.

மேலும் செய்திகள்