நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- வடசென்னை
|வடசென்னை தொகுதியின் கடந்த கால வரலாற்றை புரட்டி பார்க்கும்போது, தி.மு.க.வின் கோட்டையாகவே விளங்கி வந்திருக்கிறது.
சென்னை,
உடல் உழைப்பு தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த வடசென்னை நாடாளுமன்ற தொகுதி 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு பிறகு, 1971-ம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே 1977-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை தேர்தல் நடைபெற்றது.
2008-ம் ஆண்டு மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன்படி, இந்தத் தொகுதியில் திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் (தனி), ராயபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
தி.மு.க.வின் கோட்டை
வடசென்னை தொகுதியின் கடந்த கால வரலாற்றை புரட்டி பார்க்கும்போது, தி.மு.க.வின் கோட்டையாகவே விளங்கி வந்திருக்கிறது. இந்த தொகுதியில் தி.மு.க. 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அ.தி.மு.க. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.
அதாவது, 1957-ம் ஆண்டு தேர்தலில் எஸ்.சி.சி.அந்தோணி பிள்ளை சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.சீனிவாசன் வெற்றி வாகை சூடினார். 1967, 1971-ம் ஆண்டு தேர்தல்களில் நாஞ்சில் மனோகரனும், 1977-ம் ஆண்டு ஏ.வி.பி.ஆசைத்தம்பியும், 1980-ம் ஆண்டு ஜி.லட்சுமணனும், 1984-ம் ஆண்டு என்.வி.என்.சோமுவும் என தொடர்ந்து 5 முறை தி.மு.க. வேட்பாளர்களே வாகை சூடியுள்ளனர்.
'ஹாட்ரிக்' வெற்றி
அதன்பிறகு, 1989 மற்றும் 1991-ம் ஆண்டு தேர்தல்களில், காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் தா.பாண்டியன் வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தி.மு.க.வை சேர்ந்த என்.வி.என்.சோமு வெற்றிக்கனியை பறித்தார்.
தொடர்ந்து நடந்த 3 தேர்தல்களில் (1998, 1999, 2004) தி.மு.க. வேட்பாளர் சி.குப்புசாமி 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தார். 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.) வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக அ.தி.மு.க. வெற்றியை சுவைத்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட டி.ஜி.வெங்கடேஷ் பாபு வெற்றி வாகை சூடினார்.
டாக்டர் கலாநிதி வீராசாமி
2019-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தி.மு.க. வசமானது. தி.மு.க. சார்பில் களம் கண்ட டாக்டர் கலாநிதி வீராசாமி (முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன்) வெற்றி பெற்றார்.
அந்த தேர்தலில் டாக்டர் கலாநிதி வீராசாமி 5,90,986 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் மோகன்ராஜ் (தே.மு.தி.க.) 1,29,468 வாக்குகளும் பெற்றனர். யாரும் எதிர்பாராத வகையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் 1,03,167 வாக்குகள் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அடிப்படை வசதிகள் இல்லை
பொதுவாக, ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டால், 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று சொல்வார்கள். ஆனால், சென்னையை எடுத்துக்கொண்டால், வடக்கு (வடசென்னை) தேய்கிறது என்றுதான் சொல்லும்படி இருக்கிறது. அந்த அளவுக்கு அடிப்படை வசதிகள் கூட இன்னும் நிறைவேற்றப்படாத நிலையே தொடர்கிறது. மெட்ரோ ரெயில் சேவை மட்டும் ஒரு சில பகுதிகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளும் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன.
வடசென்னை தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதி. இங்கு 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தாழ்த்தப்பட்ட மக்கள் 19.49 சதவீதமும், பழங்குடியினர் 0.2 சதவீதமும் இருக்கின்றனர். இதேபோல், இந்துக்கள் 80 முதல் 85 சதவீதமும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தலா 5 முதல் 10 சதவீதமும் வசிக்கின்றனர். புத்த மதம், சீக்கியர்கள், ஜெயின் சமூகத்தினர் 5 சதவீதம் அளவுக்கு இருகின்றனர். 87.95 சதவீத மக்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.
தீர்க்கப்படாத பிரச்சினைகள்
வடசென்னை தொகுதி மக்களின் நீண்ட கால பிரச்சினை என்று பார்த்தால், கொடுங்கையூர் குப்பைமேடு, குடிநீரில் கழிவுநீர் - கச்சா எண்ணெய் கலப்பது, காற்று மாசுபாடு, கொசுத்தொல்லை, செப்பனிடப்படாத சாலைகள், போக்குவரத்து நெரிசல், சாலைகள் ஆக்கிரமிப்பு என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி சுத்திகரிப்பு நிலையத்துக்கு குழாய் மூலம் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லப்படும்போது ஏற்படும் கசிவால், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில், நிலத்தடி நீருடன் எண்ணெய் கலந்துவரும் பிரச்சினை அடிக்கடி நடக்கிறது. பல ஆண்டுகளாக நிலவும் இந்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படாமல் இருப்பது வேதனை.
போக்குவரத்து நெரிசல்
தற்போது, புதிய குழாய் பதிக்கும் பணி முடிந்துவிட்டாலும், சிக்கல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வியாசர்பாடி கணேசபுரத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்ட அனுமதியளித்து 10 ஆண்டுகளை கடந்த நிலையில், பணிகள் இப்போதுதான் தொடங்கும் தருவாயில் உள்ளன.
துறைமுகம் - எண்ணூர் விரைவுச் சாலை பணிகள் முடிந்தாலும், திருவொற்றியூர், எண்ணூர், மணலி சாலைகளில் எப்போதும் கனரக வாகனங்கள் வரிசைகட்டி நிற்பதை காணமுடிகிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்து சம்பவங்களும் நடந்து வருகின்றன. கார்கில் நகர் பகுதி மக்களுக்கு இன்னும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாமலேயே உள்ளது.
சாலையை மறிக்கும் சரக்கு ரெயில்
தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ராட்சத டேங்கர்களுடன் சரக்கு ரெயில்கள் அடிக்கடி வருகின்றன. அவ்வாறு வரும் சமயங்களில் சுமார் 30 நிமிடங்கள் சாலையின் குறுக்கே வழியை மறித்து நிற்கின்றன. இதனால், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டையில் இருந்து மணலி செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. பள்ளி, கல்லூரி நேரங்களில் மாணவர்களின் நிலை பரிதாபம். அங்கு, மேம்பாலமோ, அல்லது சுரங்கப்பாதையோ அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ரூ.1000 கோடி திட்டம்
ஆனால், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டம் ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 3 ஆண்டு திட்டம் என்று சொல்லப்பட்டாலும், ஓராண்டுக்கு காலத்துக்கு பிறகு இப்போதுதான் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பல அடிப்படை பணிகள் இந்த திட்ட நிதிக்காக காத்துக் கொண்டிருக்கிறதாம். இப்படி வடசென்னை தொகுதியை எடுத்துக்கொண்டால், வளர்ச்சிக்கான வழி இன்னும் திறக்கப்படவில்லை என்றே கூறலாம்.
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றார். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-
கலாநிதி வீராசாமி (தி.மு.க.) - 5,90,986
மோகன்ராஜ் (தே.மு.தி.க.) - 1,29,468
காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி) - 1,03,167
மவுரியா (மக்கள் நீதிமய்யம்) - 60,515
சந்தானகிருஷ்ணன் (அ.ம.மு.க.) - 33,277
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:-
திருவொற்றியூர் (தி.மு.க. வெற்றி)
கே.பி.சங்கர் (தி.மு.க.) - 88,185
கே.குப்பன் (அ.தி.மு.க.) - 50,524
எஸ்.சீமான் (நாம் தமிழர்) - 48,597
மோகன் (ம.நீ.ம) - 7,053
எம்.சவுந்தரபாண்டியன் - 1,417
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (தி.மு.க. வெற்றி)
ஜே.ஜே.எபினேசகர் (தி.மு.க.) - 95,763
ஆர்.எஸ்.ராஜேஷ் (அ.தி.மு.க.) - 53,284
கவுரி சங்கர் (நாம் தமிழர்) - 20,437
பாசில் (ம.நீ.ம) - 11,198
டாக்டர் பி.காளிதாஸ் (அ.ம.மு.க.) - 1,852
பெரம்பூர் (தி.மு.க. வெற்றி)
ஆர்.டி.சேகர் (தி.மு.க.) - 1,04,580
என்.ஆர்.தனபாலன் (அ.தி.மு.க.) - 50,093
மெர்லின் சுகந்தி (நாம் தமிழர்) - 19,787
பொன்னுசாமி (மக்கள் நீதி மய்யம்)- 17,026
லட்சுமி நாராயணன் (அ.ம.மு.க.) - 4,039
கொளத்தூர் (தி.மு.க. வெற்றி)
மு.க.ஸ்டாலின் (தி.மு.க.) - 1,05,794
ஆதிராஜாராம் (அ.தி.மு.க.) - 35,214
ஏ.ஜெகதீஷ்குமார் (ம.நீ.ம.) - 14,234
பெ.கெமில்ஸ் செல்வா (நாம் தமிழர்) - 11,320
ஜெ.ஆறுமுகம் (அ.ம.மு.க.) - 1,082
திரு.வி.க. நகர் (தனி) (தி.மு.க. வெற்றி)
தாயகம் கவி (தி.மு.க.) - 81,727
பி.எல்.கல்யாணி (த.மா.கா.) - 26,714
டாக்டர் ஆர்.இளவஞ்சி (நாம் தமிழர்)- 10,921
எஸ்.ஒபத் (ம.நீ.ம.) - 9,710
எம்.பி.சேகர் (தே.மு.தி.க.) - 1,787
ராயபுரம் (தி.மு.க. வெற்றி)
ஐட்ரீம் மூர்த்தி (தி.மு.க.) - 63,991
டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க.) - 36,260
எஸ்.குணசேகரன் (ம.நீ.ம.) - 8,092
எஸ்.கமலி (நாம் தமிழர்) - 7,855
சி.ராமஜெயம் (அ.ம.மு.க.) - 1,121
வெற்றி யார் கையில்?
டாக்டர் கலாநிதி வீராசாமி
ராயபுரம் ஆர்.மனோ
பால் கனகராஜ்
டாக்டர் அமுதினி
வேட்பாளர்கள் யார் யார்?
தி.மு.க.வின் கோட்டையாக வடசென்னை தொகுதி இருந்து வருகிறது. இடையில், 2014-ம் ஆண்டு தேர்தலில் மட்டும் அ.தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியது. என்றாலும், கடந்த தேர்தலில் தி.மு.க. மீண்டும் கைப்பற்றி அசத்தியது.
இந்தத் தேர்தலில், தி.மு.க. சார்பில் மீண்டும் டாக்டர் கலாநிதி வீராசாமி, அ.தி.மு.க. சார்பில் ராயபுரம் ஆர்.மனோ, பா.ஜனதா சார்பில் ஆர்.சி.பால் கனகராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அமுதினி ஆகியோர் களம் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் அ.தி.மு.க. சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள ராயபுரம் ஆர்.மனோ, காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே தொகுதி மக்களிடம் பிரபலம். பா.ஜனதா வேட்பாளர் ஆர்.சி.பால் கனகராஜ் பிரபல வக்கீல். சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவராக இருந்திருக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி பல் மருத்துவர் ஆவார்.
எனவே, வடசென்னை தி.மு.க.வின் கோட்டையாகவே இருக்குமா?, அல்லது கோட்டை விட்டுவிடுமா? என்று அலசி ஆராய்ந்து பார்த்ததில் தி.மு.க.வுக்கே வெற்றியின் கதவு திறக்கும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் அது எளிதாக நடந்துவிடாது.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய 6 தொகுதிகளிலும் தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் வடசென்னை தொகுதியில் 16,166 வாக்காளர்களே அதிகரித்துள்ளனர். போலி வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதே இந்த சரிவுக்கு காரணம். முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கையை சரியாக கணிக்க முடியவில்லை என்றாலும், அவர்களும் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளில் ஒன்றாக இருப்பார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
கலாநிதி வீராசாமி எம்.பி.யின் செயல்பாடு குறித்து தொகுதி மக்கள் சிலரிடம் கேட்டபோது, 'கடந்த 2 ஆண்டுகளாகத்தான் அவர் தொகுதி பக்கம் வருகிறார். அதுவும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவே வருகிறார்' என்று கூறினர்