< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- காஞ்சீபுரம் (தனி)
நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- காஞ்சீபுரம் (தனி)

தினத்தந்தி
|
4 April 2024 3:45 PM IST

மதுராந்தகம் ஏரி, தென்னேரி, தாமல் ஏரி என ஏரிகள் நிறைந்த தொகுதியாகவும் கோவில் நகரம், சுற்றுலா தலங்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளது காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி.

கோவில் நகரம், பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சீபுரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றது. உலக புகழ்பெற்ற பட்டுசேலைகள் உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது. திராவிட கட்சிகளின் முன்னோடியும் தி.மு.க.வை தோற்றுவித்தவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான அண்ணாவின் பிறந்த ஊர் காஞ்சீபுரம்.

காஞ்சீபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தாலும், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலும், பஞ்ச பூததலங்களில் மண் தலமாக விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலும், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் வைபவம் நடைபெறும் வரதராஜ பெருமாள் கோவில், தமிழ் கடவுளான முருகப்பெருமானின் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கும் குமரக்கோட்டம் முருகன் கோவிலும், மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலும் இந்த தொகுதியில் உள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், திருப்போரூர் முருகன் கோவில், திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோவில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் என எண்ணிலடங்கா கோவில்களை உள்ளடக்கிய நாடாளுமன்ற தொகுதியாகவும் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி விளங்குகிறது. மாமல்லபுரம், கோவளம், முட்டுக்காடு, ஆலம்பரக்கோட்டை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் என பல்வேறு சுற்றுலா தலங்களையும் கொண்ட தொகுதியாகவும் உள்ளது.

மதுராந்தகம் ஏரி, தென்னேரி, தாமல் ஏரி என ஏரிகள் நிறைந்த தொகுதியாகவும் கோவில் நகரம், சுற்றுலா தலங்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளது காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி.

கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது புதிதாக உதயமானது காஞ்சீபுரம் (தனி) தொகுதி. அதற்கு முன்பு செங்கல்பட்டு தொகுதியாக இருந்தது. ஆரம்பத்தில் இந்த தொகுதியில் திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.

1952-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வந்த செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ் தலா 4 முறையும், தி.மு.க. 3 முறையும், பா.ம.க. 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளரும் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளார்.

2008-ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் போது, செங்கல்பட்டு தொகுதி காஞ்சீபுரம் (தனி) தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது. புதிதாக உதயமான காஞ்சீபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெ.விஸ்வநாதன், அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணனை 13,103 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை 1,46,866 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த செல்வம் வெற்றி பெற்றார். கடந்த 2019-ம் ஆண்டு அ.தி.மு.க-வை சேர்ந்த மரகதம் குமரவேல் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த செல்வம் ஆகியோர் மீண்டும் 2-வது முறையாக நேரடியாக களம் கண்டனர். தி.மு.க. வேட்பாளர் ஜி.செல்வம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை விட 2 லட்சத்து 86 ஆயிரத்து 632 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

காஞ்சீபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தாழ்த்தப்பட்ட மக்கள் 29.92 சதவீதமும், பழங்குடியினர் 1.51 சதவீதமும் வசிக்கின்றனர். இந்துக்கள் 90 முதல் 95 சதவீதம் வரை உள்ளனர்.கல்வி அறிவு பெற்றவர்கள் 79.44 சதவீதம் பேர் உள்ளனர்.

தீர்க்கப்படாத பிரச்சினை

காஞ்சீபுரம் பகுதியில் முக்கிய தொழிலாக நெசவுத்தொழில் விளங்குகிறது. தற்போது நலிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வெளிமாநில பட்டுசேலைகள் விற்பனை அதிகரித்துள்ளதாலும் காஞ்சீபுரம் பட்டு சேலையின் விலை தங்கம் வெள்ளி பட்டு உள்ளிட்டவர்களின் விலை ஏற்றத்தால் அதிகரித்து உள்ளதாலும், கைத்தொழிலான பட்டு நெசவு தொழிலுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளதாலும் பட்டு தொழில் நலிவடைந்துள்ளது.

கைத்தறி பட்டு நெசவுத்தொழிலுக்கான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என்பது காஞ்சீபுரம் நெசவாளர்களின் கோரிக்கையாக உள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோவில், முட்டுக்காடு படகு இல்லம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் அந்த இடங்களின் தரத்தை மேம்படுத்தி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்திட எந்த வித நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

சென்னையில் இருந்து மாமல்லபுரத்தை எளிதில் சென்று பார்க்க மெட்ரோ ரெயில் வசதியை நீட்டிக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பாரம்பரிய நகரம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும் கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் பக்தர்கள் வந்து செல்ல தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. காஞ்சீபுரத்தில் கோவில்கள் அதிகமாக இருந்தாலும் அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ஏரிகள் நிறைந்த நாடாளுமன்ற தொகுதியாக இருந்தாலும் ஏரிகளும் முறையாக தூர்வாரப்படாததால் விவசாயமும் பொய்த்து வருகிறது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும் அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

கல்விக்கு கரையில்லா காஞ்சி என புகழ்பெற்ற காஞ்சீபுரம் பகுதியில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதுவும் இல்லை என்பது வேதனையான விஷயம். செய்யூர் பகுதியில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க சிறு துறைமுகத்தை அமைத்துத்தர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

மத்திய அரசின் நிறுவனமாக உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு எதுவும் அளிக்கப்படுவதில்லை என்பதும், அங்கு உள்ளூர் மக்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட க.செல்வம் வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

க.செல்வம் (தி.மு.க.) 6,84,004

மரகதம் குமரவேல் (அ,தி.மு.க.) 3,97,372

டி.சிவரஞ்சனி (நாம் தமிழர் கட்சி) 62,771

முனுசாமி (அ.ம.மு.க.) 55,213

வாக்காளர்கள் எவ்வளவு?

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி காஞ்சீபுரம் தனி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்காளர்கள் 17,20,600

ஆண்கள் 8,40,919

பெண்கள் 8,79,389

மூன்றாம் பாலினத்தவர் 292

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை விவரம்:-

செங்கல்பட்டு 4,09,785

திருப்போரூர் 2,92,438

செய்யூர் (தனி) 2,20,492

மதுராந்தகம் (தனி) 2,22,607

உத்திரமேரூர் 2,65,598

காஞ்சீபுரம் 3,09,680

வேட்பாளர்கள் விவரம்

க.செல்வம்(தி.மு.க.)

ராஜசேகர் (அ.தி.மு.க.)

சந்தோஷ் குமார் (நாம் தமிழர்)

ஜோதி வெங்கடேசன் (பா.ம.க.)

வெற்றி யார் கையில்?

காஞ்சீபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் க.செல்வம் போட்டியிட்டனர். அவர்களில் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் மீண்டும் மரகதம் குமரவேல் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் க.செல்வம் மீண்டும் போட்டியிட்டார். இந்த தேர்தலில் க.செல்வம் வெற்றி பெற்றார்.

இந்த முறை காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. சார்பில் மீண்டும் 3-வது முறையாக க.செல்வமே களம் இறக்கப்பட்டுள்ளார். தற்போதைய எம்.பி.யாக உள்ள க.செல்வம் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். அ.தி.மு.க. சார்பில் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளராகவும் உள்ள பெரும்பாக்கம் ராஜசேகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதன் மூலம் காஞ்சீபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக களம் காண்கிறது.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி தற்போது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. பா.ம.க. சார்பில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசனின் மனைவி ஜோதி பா.ம.க. வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.

தனித்து போட்டியிடும் கட்சியான நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தலைவராக உள்ள என்ஜினீயர் வி.சந்தோஷ் குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காஞ்சீபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, திருப்போரூர், செய்யூர் போன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முனை போட்டி ஏற்பட்டு தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பது வாக்காளர்கள் கையில்தான் உள்ளது.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:-

காஞ்சீபுரம் (தி.மு.க. வெற்றி)

சி.வி.எம்.பி. எழிலரசன் (தி.மு.க.) 1,02,712

பி.மகேஷ் குமார் (பா.ம.க.) 91,117

எஸ் சால்டின் (நாம் தமிழர் கட்சி) 13,946

கோபிநாத் (மக்கள் நீதி மய்யம்) 12,028

மனோகரன் (அ.ம.மு.க) 2,301

உத்திரமேரூர் (தி.மு.க. வெற்றி)

க.சுந்தர் (தி.மு.க.) 93,427

வி.சோமசுந்தரம் (அ.தி.மு.க.) 91,805

காமாட்சி (நாம் தமிழர் கட்சி) 11,405

ஆர்வி.ரஞ்சித் குமார் (அ.ம.மு.க.) 7,211

சூசையப்பர் (மக்கள் நீதி மய்யம்) 2,100

மதுராந்தகம் (அ.தி.மு.க. வெற்றி)

கே.மரகதம் குமரவேல்(அ.தி.மு.க.) 86,646

மல்லை சி.இ.சத்யா (ம.தி.மு.க.) 83,076

வி.சுமிதா(நாம் தமிழர் கட்சி) 9,293

என்.மூர்த்தி (தே.மு.தி.க.) 2,137

கே.தினேஷ் (மக்கள் நீதி மய்யம்) 1,488

செய்யூர் (வி.சி.க. வெற்றி)

எம்.பாபு (வி.சி.க.) 82,750

எஸ்.கணிதா சம்பத் (அ.தி.மு.க.) 78,708

ஆர்.ராஜேஷ் (நாம் தமிழர் கட்சி) 9,653

சிவா (தே.மு.தி.க.) 3,054

பி.அன்பு தமிழ் சேகரன்

(மக்கள் நீதி மய்யம்) 1,968

திருப்போரூர் (வி.சி.க. வெற்றி)

எஸ்.எஸ்.பாலாஜி (வி.சி.க.) 93,954

கே.ஆறுமுகம் (பா.ம.க.) 92,007

எஸ்.மோகன சுந்தரி (நாம் தமிழர் கட்சி) 20,428

என்.லாவண்யா(மக்கள் நீதி மய்யம்) 8,194

எம்.கோதண்டபாணி (அ.ம.மு.க.) 7,662

செங்கல்பட்டு (தி.மு.க. வெற்றி)

எம். வரலட்சுமி மதுசூதனன் (தி.மு.க.) 1,30,573

எம். கஜேந்திரன் (அ.தி.மு.க.) 1,03,908

கே சஞ்சீவி நாதன்(நாம் தமிழர் கட்சி) 26,868

எஸ்.முத்தமிழ் செல்வன்(ஐ.ஜே.கே.) 4,146

ஏ.சதீஷ்குமார் (அ.ம.மு.க.) 3,069

மேலும் செய்திகள்