நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- தர்மபுரி
|தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி கடந்த 1977- ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 12 தேர்தல்களை சந்தித்து உள்ளது.
தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி,அரூர் (தனி) மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
ஒகேனக்கல், மேட்டூர் அணை
கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி ஆறு தமிழ்நாட்டில் நுழையும் ஒகேனக்கல், காவிரி டெல்டாபகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கும் மேட்டூர் அணை ஆகியவை தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில்தான் அமைந்துள்ளன.தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி கடந்த 1977- ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 12 தேர்தல்களை சந்தித்து உள்ளது. இந்த தேர்தல்களில் தி.மு.க. 3 முறையும், பா.ம.க. 4 முறையும், அ.தி.மு.க., காங்கிரஸ் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் இந்த தொகுதியில் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொகுதியில் 1977- ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வாழப்பாடி ராமமூர்த்தி, 1980-ம் ஆண்டு தி.மு.க.வைச் சேர்ந்த அர்ஜுனன். 1984-ம் ஆண்டு அ.தி.மு.கவை சேர்ந்த தம்பிதுரை, 1989-ம்ஆண்டு அதி.மு.க.வைச் சேர்ந்த எம்.ஜி. சேகர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 1991-ம் ஆண்டு நடந்ததேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கே.வி.தங்கபாலு, 1996-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தீர்த்தராமள், 1998-ம் ஆண்டு பா.ம.கவை சேர்ந்த பாரி மோகன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1999 ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட பு.தா.இளங்கோவன், 2004-ம் ஆண்டு பா.ம.க.வைச் சேர்ந்த டாக்டர் செந்தில், 2009-ம் ஆண்டு தி.மு.க.வேட்பாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் வெற்றி பெற்றனர். 2014- ம் ஆண்டு தேர்தலில் பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார். கடந்த 2019-ம்ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர்செந்தில்குமார் வெற்றி பெற்றார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க. வசம் 3 தொகுதிகளும், பா.ம.க. வசம் 3 தொகுதிகளும் உள்ளன.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் 35சதவீதமும், ஆதிதிராவிடர் சமூகத்தினர் 25 சதவீதமும், கொங்குவேளாளக் கவுண்டர் சமூகத்தினர் 15 சதவீதமும். மற்ற சமூகங்களை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும் இருப்பதாக கூறப்படுகிறது, இதேபோல் கிறிஸ்தவர்கள். மற்றும் இஸ்லாமியர்கள், பழங்குடிமக்களும் கணிசமாக உள்ளனர். விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்ட தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பருவ மழையை நம்பி சாகுபடிபணிகள் நடக்கும்
மானாவரி விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு கரும்பு, தக்காளி, கேழ்வரகு, மாம்பழம்,மரவள்ளி கிழங்கு ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அரூர், பாலக்கோடு, பகுதிகளில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் மேட்டூரில் அலுமினியம் மற்றும் ரசாயனதொழிற்சாலைகளும்அமைந்துள்ளன.
இடம்பெயரும் இளைஞர்கள்
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் ஓன்றாக கருதப்படும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் படித்த இளைஞர்களில் சுமார் 3 லட்சம் பேர் வேலைவாய்ப்பிற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தொழில் வளர்ச்சிக்கான தேசிய நெடுஞ்சாலை வசதி, ரெயில் பாதை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் அமைந்துள்ளன. இருந்த போதிலும் இந்த அடிப்படை வளங்கள் இதுவரை தேவையான அளவில் பயன்படுத்தப்படவில்லை.தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய-மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சுமார் 40 சதவீத வனப்பகுதிகொண்ட இந்த மாவட்டத்தில் வனம் சார்ந்ததொழில் வளர்ச்சிக்கான சிறப்புதிட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகின்றன.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் முதல் கட்ட நிலையில் உள்ளன. இங்கு புதிய தொழிற்சாலைகளை விரைவாக தொடங்கி அதிக வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் விவரம் எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில்7 லட்சத்து 64 ஆயிரத்து 878 ஆண்கள், 7 லட்சத்து 47 ஆயிரத்து 678 பெண்கள், 176 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 15 லட்சத்து 12 ஆயிரத்து 732 வாக்காளர்கள் உள்ளனர். இதில் புதிதாக 32535 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
பாலக்கோடு - 2,38,177
பென்னாகரம் - 2,45,195
தர்மபுரி - 2.59,274
பாப்பிரெட்டிப்பட்டி - 2,56,322
அரூர் (தனி) - 2,43,857
மேட்டூர்- 2,69,907
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் எம்.பி. 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த
தேர்தலில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-
செந்தில்குமார் (தி.மு.க)- 5,74,988
அன்புமணி ராமதாஸ் (பா.ம.க) - 5,04,235
பழனியப்பன் (அ.ம.மு.க)- 53,655
ருக்மணி தேவி (நாம் தமிழர்)-19,674
ராஜசேகர் (மக்கள் நீதி மய்யம்) 15,614
வெற்றி யார் கையில்?
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாலக்கோடு, அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 3 தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. தர்மபுரி, பென்னாகரம், மேட்டூர் ஆகிய 3 தொகுதிகளை பா.ம.க. கைப்பற்றியது. தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் வெவ்வேறு கூட்டணியில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகித்துள்ள இந்தியா கூட்டணியில் தி.மு.க. வேட்பாளராக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஆ.மணி போட்டியிடுகிறார்.
வக்கீலான இவர் கட்சியினர் இடையே நல்ல அறிமுகம் ஆனவர். கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் உடன் இணைந்து தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளராக களம் காணும் அசோகன் அரசு டாக்டர். தேர்தல் களத்திற்கு புதியவர். இவருடைய தந்தை பூக்கடை ரவி. தர்மபுரி நகர அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அசோகன் அ.தி.மு.க.விற்கு இந்த தொகுதியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தே.மு.தி.க. கூட்டணியில் இருப்பது அ.தி.மு.க.விற்கு பலமாக பார்க்கப்படுகிறது.
இந்த தொகுதியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக மாறி உள்ளது. இந்த தொகுதியில் பா.ம.க. ஏற்கனவே 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பா.ம.க. தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் போட்டியிடுவதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கூட்டணி கட்சியினரும், ஆர்வத்துடன் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிநயா வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு புதியவர் என்றாலும் இந்த தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியை மேற்கொண்டு உள்ளார். இந்த தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணி பலத்துடனும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் களம் காண்கின்றன. இந்த தொகுதியில் தேர்தல் களம் கடும் போட்டி கொண்டதாக மாறி உள்ளது.