< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்-சிதம்பரம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்-சிதம்பரம்

தினத்தந்தி
|
4 April 2024 3:15 PM IST

2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது மங்களூர் (தற்போதைய திட்டக்குடி தொகுதி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் நீக்கப்பட்டது.

லகப்புகழ் பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ள ஆன்மிக பூமி தான் சிதம்பரம் தொகுதி(தனி). அதோடு, காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாகவும் இருக்கிறது.

தலைநகரில்(சென்னை) வசிக்கும் மக்களின் குடிநீர் தேவை இங்குள்ள வீராணத்தில் இருந்து அனுப்பப்படும் தண்ணீரால் தான் பூர்த்தியாகிறது. இதுதவிர பிச்சாவரம் சதுப்பு நில காடுகள், கடற்கரைகள், பழமைவாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகமும் அமைந்து இருக்கிறது.

குவிந்து கிடக்கும் வளங்கள்

கடலூர் மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பரந்து விரிந்த இந்த தொகுதியில் அங்குள்ள சுண்ணாம்புக்கல், மணல் கற்கள், சுண்ணாம்பு படிவங்கள், சுடுமண் குழாய்கள் என கனிம வளங்கள் இங்கு கொட்டிக்கிடக்கிறது. இவ்வாறு எல்லா வளங்களும் குவிந்து கிடக்கும் இந்த தொகுதியின் பெருமைகளை இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியானது கடந்த 1957-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது இத்தொகுதி இரட்டை உறுப்பினர்களை கொண்ட தொகுதியாக இருந்தது. 2004-ம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை இத்தொகுதியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில் (தனி), மங்களூர் (தனி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.

3 தொகுதிகள் நீக்கம்

2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது மங்களூர் (தற்போதைய திட்டக்குடி தொகுதி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் நீக்கப்பட்டது.

அதற்கு பதிலாக அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த குன்னம் சட்டமன்ற தொகுதியும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியுடன் சேர்க்கப்பட்டது. தற்போது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த குன்னம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன.

ஹாட்ரிக் வெற்றி

சிதம்பரம் தொகுதி இதுவரை நடந்த 16 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 5 முறை காங்கிரசும், தி.மு.க. 4 முறையும், பா.ம.க. 3 முறையும், அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.அதாவது 1957, 1962-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கனகசபை தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார். அதன்பின் 1967, 1971 -ம் ஆண்டுகளில் தி.மு.க. வேட்பாளர் மாயவனும் தொடர்ந்து 2 முறையும் வெற்றி வாகை சூடினர். 1977-ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளர் முருகேசன், 1980-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் குழந்தைவேலுவும் வெற்றி பெற்றார்கள்.

தொடர்ந்து நடந்த 3 தேர்தல்களில் (1984, 1989, 1991) காங்கிரஸ் வேட்பாளர் வள்ளல்பெருமான் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். இதன்பின் 1996-ம் ஆண்டு (தி.மு.க.) கணேசன், 1998-ம் ஆண்டு (பா.ம.க.) தலித் எழில்மலை, (1999, 2004) 2 முறை பா.ம.க. வேட்பாளர் பொன்னுசாமியும் வெற்றி பெற்றார்.

ஹாட்ரிக் வெற்றி பெற்ற பா.ம.க.வை கடந்த 2009-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வென்று, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 2014-ம் ஆண்டு (அ.தி.மு.க.) சந்திரகாசி வெற்றி பெற்றார்.

அதன்பின்னர் 2019-ம் ஆண்டு திருமாவளவன் 2-வது முறையாக வெற்றியை பதிவு செய்தார். அவர் 5 லட்சத்து 229 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் 4 லட்சத்து 97 ஆயிரத்து 10 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதன் மூலம் 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இருப்பினும் மற்ற தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள். இதனால் இந்த தேர்தலில் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம். அதை முறியடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

இந்த தொகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். காவிரி டெல்டா கடை கோடி தொகுதியாகவும் அமைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சார்ந்து தான் விவசாயிகள் இருக்கிறார்கள்.ஆனால், வரும் நீரை தேக்கி வைக்க ஆதாரமாக லால்பேட்டையில் இருக்கும் வீராணம் ஏரி முழு அளவில் இல்லை. தூர்ந்துபோய் கிடக்கும் இந்த ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும். இதுதவிர கொள்ளிடம், வெள்ளாறு மூலம் கடல் நீர் புகுந்து, நிலத்தடி நீர் உப்பாக மாறி வருவதால், அந்த பகுதிகளில் தடுப்பணை கட்ட வேண்டும்.

புவனகிரி தொகுதியில் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து உரிய இழப்பீடு, மாற்று இடம், வேலைவாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை தீர்க்க வேண்டும். இவ்வாறாக விவசாயிகள் பல இடர்களுடன் நித்தமும் போராடி வருகிறார்கள்.

இதுமட்டுமல்ல பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகள் உள்ளன. இங்குள்ளவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டுவது இங்கு களம் காணும் வேட்பாளர்களின் முதன்மையான நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

கங்கைகொண்ட சோழபுரம்

இதுதவிர ஜெயங்கொண்டத்தில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வருதல், புவனகிரியில் மலர்களில் இருந்து வாசனை திரவியம் தொழிற்சாலை கொண்டு வருதல், குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகளாக மாற்றி அமைத்தல் போன்ற கோரிக்கைகள் இதுவரை நிறைவேறாமல் உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை பழமைமாறாமல் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அழகுப்படுத்த வேண்டும். காட்டுமன்னார்கோவிலில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதை தீர்க்க இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுபோன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

வேலைவாய்ப்பு

அரியலூரில் 8 சிமெண்டு ஆலைகளும், ஒரு சர்க்கரை ஆலையும், சேத்தியாத்தோப்பில் ஒரு சர்க்கரை ஆலையும் உள்ளன. இது தவிர தொழிற்சாலைகள் பெரிய அளவில் இல்லை. வேலைவாய்ப்பும் இல்லாத நிலை உள்ளது. இது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும்.

இத்தொகுதியில் அதிக அளவில் ஆதிதிராவிடர்களும், அடுத்தபடியாக வன்னியர்களும் உள்ளனர். இதுதவிர உடையார்கள், பிள்ளைமார்கள், யாதவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தினரும் கணிசமாக உள்ளனர்.

கடந்த காலங்களில் இந்த தொகுதியின் வளர்ச்சிப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், கட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாக்களித்து வருவதால், பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வி.சி.க. சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றி வாகை சூடினார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

திருமாவளவன் (வி.சி.க.) .................................................- 5,00229

சந்திரசேகர் (அ.தி.மு.க.) ...............................................- 4,97,010

இளவரசன் (அ.ம.மு.க.) ..................................................- 62,308

சிவஜோதி (நாம் தமிழர் கட்சி)........................................ -37471

ரவி (மக்கள் நீதி மய்யம்).................................................. -15334

வெற்றி யார் கையில்?

சிதம்பரம் தொகுதியில் 5 முறை போட்டியிட்ட திருமாவளவன் 2 முறை வெற்றி பெற்றுள்ளார். 3 முறை தோல்வியை தழுவி உள்ளார். அதாவது, கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வி.சி.க. சார்பில் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் திருமாவளவன் 5 லட்சத்து 229 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் 4 லட்சத்து 97 ஆயிரத்து 10 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 3219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரகாசியிடம் தோல்வியை சந்தித்த திருமாவளவன்,. 2009-ம் ஆண்டு தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் பொன்னுசாமியை தோற்கடித்து வெற்றி பெற்றார். அதன்பின் 1999 மற்றும் 2004-ம் ஆண்டு தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் பொன்னுசாமியிடம் திருமாவளவன் தோல்வியை சந்தித்தார்.

தற்போது 6-வது முறையாக இந்த தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி வி.சி.க.விடம் உள்ளது. இது தவிர அந்த தொகுதியில் தி.மு.க. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குன்னம் தொகுதியை சேர்ந்த அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இருப்பது கூடுதல் பலமாக உள்ளது. இதன் மூலம் தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டுகள் வலுவாக உள்ள தொகுதியாக சிதம்பரம் உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. வேட்பாளராக சந்திரகாசன் பேட்டியிடுகிறார். ஏற்கனவே சிதம்பரம், புவனகிரி தொகுதி அ.தி.மு.க. கைவசம் உள்ளது. இது கூடுதல் பலத்தை கொடுக்கிறது. இருப்பினும் தே.மு.தி.க., மற்றும் அ.தி.மு.க. வாக்கு வங்கிகள் அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் என்று தொகுதியை சுற்றி வலம் வருகிறார்.

பா.ஜனதா வேட்பாளர் கார்த்தியாயினி வேலூர் முன்னாள் மேயராக இருந்தவர். பா.ஜனதா மாநில மகளிரணி செயலாளராகவும், தற்போது மாநில பொதுச்செயலாளராகவும் உள்ளார். பா.ம.க. ஏற்கனவே இந்த தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றுள்ளது.

இதில் வெற்றி பெற்ற தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகியோர் மத்திய மந்திரிகளாக வலம் வந்தனர். பா.ம.க.வுக்கு கணிசமான ஓட்டுகள் உள்ளது. பா.ஜனதாவும் வளர்ந்து வரும் நிலையில், அதற்கான நம்பிக்கையில் அவரும் பிரசாரத்தை கையில் எடுத்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெரம்பலூரை சேர்ந்த ஜான்சிராணியும், அவர்களுக்கான கட்சி செல்வாக்கை நம்பி உள்ளார். இருப்பினும் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஜூன் 4-ந்தேதி தான் தெரிய வரும்.

மேலும் செய்திகள்