நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- மத்திய சென்னை
|தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வி.ஐ.பி. தொகுதி என்ற அந்தஸ்து மத்திய சென்னைக்கு உண்டு.
உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான மெரினா, மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் தலைவர்களான பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் மத்தியசென்னை தொகுதியில்தான் அமைந்துள்ளன.
சென்னை துறைமுகம், ஐகோர்ட்டு, தலைமை செயலகம், மாநகராட்சி ரிப்பன் மாளிகை, பெரியார் திடல், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி போன்ற நகரின் முக்கிய இடங்கள் இந்த தொகுதியில்தான் நிறைந்து இருக்கின்றன.
நீக்கப்பட்ட 2 சட்டமன்ற தொகுதிகள்
பல்வேறு அடையாளங்களை சுமந்திருக்கும் மத்திய சென்னை தொகுதியில் பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி இருந்தன. 2008-ம் ஆண்டு தொகுதிகள் மறுசீரமைப்பில் பூங்கா நகர், புரசைவாக்கம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் நீக்கப்பட்டன. அதற்கு பதிலாக வில்லிவாக்கம், துறைமுகம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் மத்திய சென்னையில் இணைக்கப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றை பொறுத்தவரையில் மத்திய சென்னை தொகுதியை அதிக முறை தி.மு.க. தன்வசப்படுத்தி உள்ளது. இந்த தொகுதியில் இதுவரை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் 7 முறை தி.மு.க.வும், 2 முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றி வாகை சூடியுள்ளன. அ.தி.மு.க. மற்றும் ஜனதா கட்சிகள் தலா ஒரு முறை வெற்றியை ருசித்துள்ளன.
அதன்படி 1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளர் பா.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். 1980, 1984-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்த ஏ.கலாநிதியும், 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் அன்பரசும் மகுடம் சூடினார்கள்.
முரசொலி மாறன் 'ஹாட்ரிக்' வெற்றி
1996-ம் ஆண்டு முதல் மத்திய சென்னை தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக திகழ தொடங்கியது. ஏனெனில் 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக களமிறங்கிய முரசொலி மாறன் 'ஹாட்ரிக்' வெற்றியை பெற்று முத்திரை பதித்தார். மத்திய மந்திரி ஆனார். 2004, 2009-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அவரது மகன் தயாநிதிமாறன் இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி வாகை சூடினார். அவரும் மத்திய மந்திரி ஆனார். எனவே மத்திய மந்திரிகளை உருவாக்கிய தொகுதி என்ற அடையாளத்தையும் மத்திய சென்னை பெற்றது
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க. முதல் வெற்றியை பதிவு செய்தது. அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்ட எஸ்.ஆர்.விஜயகுமார் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை 45 ஆயிரத்து 841 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால் தயாநிதி மாறனின் 'ஹாட்ரிக்' சாதனை கனவு தகர்ந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக தயாநிதிமாறன் மீண்டும் களம் இறங்கினார். அவர் 4 லட்சத்து 47 ஆயிரத்து 150 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
புத்துயிர் பெறும் எழும்பூர் ரெயில் நிலையம்
மத்திய சென்னை தொகுதியை பொறுத்தவரையில் பயணிகள் கூட்டத்தால் திக்குமுக்காடும் சென்டிரல் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படாமல் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். எனினும் போதிய அளவுக்கு கழிப்பிட வசதி, தங்கும் வசதிகள் இல்லாத சூழல் இருக்கிறது. இதனால் ரெயில் நிலைய வளாகத்தை ஓய்வு அறை போன்று பயணிகள் பயன்படுத்தும் நிலை தொடர்கதையாக உள்ளது.
இந்த அவலம் எப்போது மாறும் என்ற கேள்வி எழுகிறது. சென்டிரல் ரெயில் நிலையத்தை நவீனமயமாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
அதே நேரத்தில் எழும்பூர் ரெயில் நிலையத்தை ரூ.734.91 கோடியில் விரிவுபடுத்தி புதுப்பொலிவூட்டும் பணிகள் தொடங்கி இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது. வி.ஐ.பி. தொகுதியாக இருந்தாலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மத்திய சென்னையும் வெள்ளத்தில் சிக்கி தவிப்பது சொல்லொணா துயரமாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் வலியுறுத்தலாகவும், வேண்டுகோளாகவும் உள்ளது. போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு விடிவு காலம் பிறக்காதா? என்பதும் இந்த தொகுதி மக்களின் ஏக்கமாக உள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள வில்லிவாக்கத்தின் புதிய அடையாளமாக கண்ணாடி நடை பாலம் பிரமிப்பூட்டுகிறது. ஆனால் இது எப்போது திறக்கப்படும்? என்ற கேள்வியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பாரிமுனை, பூக்கடை, கொத்தவால்சாவடி போன்ற பகுதிகள் நெரிசலால் சிக்கித்தவிக்கும் நிலை தொடர்கதையாகவே இருக்கிறது. பாண்டி பஜார் போன்று இந்த பகுதிகள் எப்போது மாறும்? என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மாறி வரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மத்திய சென்னை தொகுதியிலும் இன்னும் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் வெற்றி வாகை சூடினார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-
தயாநிதி மாறன் (தி.மு.க.)...... 4,47,150.
சாம்பால் (பா.ம.க.)..... 1,46,813
கமிலா நாசர் (மக்கள் நீதி மய்யம்).... 92,047
டாக்டர் கார்த்திகேயன் (நாம் தமிழர்).... 30,809
தெகலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ.)..... 23,690
(* அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகித்தது).
வெற்றி யார் கையில்?
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் 4 லட்சத்து 47 ஆயிரத்து 150 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அவர் 3-வது முறை (2004, 2009, 2019) வெற்றி, ஒரு முறை (2014) தோல்வி அடைந்துள்ளார்.
தற்போது மத்தியசென்னை தொகுதியில் தயாநிதி மாறன் 5-வது முறையாக களம் காண்கிறார். இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக அந்த கட்சியின் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளராக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் கார்த்திகேயன் நிறுத்தப்பட்டு உள்ளார்.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள துறைமுகம், வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றியை பெற்றது. எனவே மத்திய சென்னையில் உதயசூரியனே மீண்டும் உதிக்கும் என்பது தி.மு.க.வினரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. மற்ற வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களத்தில் இறங்கி உள்ளனர். ஆனால் மக்கள் மனதில் யார்? வெற்றிக்கனியை பறிக்க போவது யார்? என்பதற்கு ஜூன் 4-ந் தேதி (வாக்கு எண்ணிக்கை) அன்று விடை கிடைத்து விடும்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் 13 லட்சத்து 31 ஆயிரத்து 135 பேர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தனர். இதில் 7 லட்சத்து 81 ஆயிரத்து 860 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். கடந்த 5 ஆண்டுகளில் 11 ஆயிரத்து 32 வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறனின் 5 ஆண்டு கால செயல்பாடு குறித்து தொகுதி மக்கள் கூறும்போது, 'மழை வெள்ளத்தில் களத்தில் நின்றார். நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். கட்சி நிகழ்ச்சிகளுக்கு அதிக அக்கறை காட்டுகிறார். எனவே அடிக்கடி தொகுதியில் பார்க்க முடிகிறது. நாடாளுமன்றத்தில் பொதுவான பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போன்று மத்திய சென்னை தொகுதி சார்ந்த திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்' என்றனர்.
களத்தில் யார் யார்?
தயாநிதி மாறன் (திமுக)
வினோத் பி செல்வம் (பாஜக)
பார்த்த சாரதி (தேமுதிக)
கார்த்திகேயேன் (நாம் தமிழர்)
வாக்காளர்கள் எவ்வளவு?
தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 13 லட்சத்து 43 ஆயிரத்து 167 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்வாக்காளர்கள் 6 லட்சத்து 64 ஆயிரத்து 76, பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 78 ஆயிரத்து 658, மூன்றாம் பாலினத்தினர் 433.
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
வில்லிவாக்கம்..... 2,39,408
எழும்பூர் (தனி)..... 1,91,700
துறைமுகம்...... 1,72,624
திருவல்லிக்கேணி.... 2,32,672
ஆயிரம்விளக்கு..... 2,34,261
அண்ணாநகர்..... 2,72,502