மக்களவை தேர்தல்: மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா வேட்பு மனு தாக்கல்
|மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா, பா.ஜனதா சார்பில் மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய மத்திய மந்திரியுமான அர்ஜுன் முண்டா, பா.ஜனதா சார்பில் மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் நேற்று குந்தி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மாநில பா.ஜனதா தலைவர் பாபுலால் மராண்டி மற்றும் பல மூத்த தலைவர்களும் உடன் சென்றிருந்தனர்.
கடந்த 2019 தேர்தலில் அர்ஜுன் முண்டா, காங்கிரஸ் வேட்பாளர் காளிசரண் முண்டாவை எதிர்த்து போட்டியிட்டு 1,445 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போதும் காளிசரண் முண்டா அதே தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ.வான ஜோபா மஞ்சி, சிங்பூம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர், சிறையில் உள்ள ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் மற்றும் முதல்-மந்திரி சாம்பாய் சோரன் ஆகியோருடன் சென்று மனுதாக்கல் செய்தார்.