மக்களவைத் தேர்தல்: 4ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் மாயாவதி
|மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் 40 பேரணிகளை நடத்த மாயாவதி திட்டமிட்டுள்ளார்.
லக்னோ,
நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 7 கட்டங்களிலும் இம்மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பிரதான அரசியல் கட்சியாக திகழும், முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. ஏற்கெனவே 3 கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று 4வது கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வெளியிட்டார் . இதில் மொத்தம் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் பீம் ராஜ்பர் அசாம்கர் தொகுதியிலும், பாலகிருஷ்ணா சவுகான் கோசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இட்டா தொகுதியில் முகமது இர்பான், தவுராக்ரா தொகுதியில் ஷியாம் கிஷோர் அவஸ்தி, பைசாபாத்தில் சச்சிதானந்த் பாண்டே, பாஸ்தி தொகுதியில் தயாஷங்கர் மிஸ்ரா ஆகியோர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கோரக்பூரில் ஜாவேத் சிம்னானி, சந்தவுலி தொகுதியில் சத்யேந்திர குமார் மவுரியா, ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதியில் தனேஷ்வர் கவுதம் ஆகியோர் போட்டியிட உள்ளனர். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் 40 பேரணிகளை நடத்த மாயாவதி திட்டமிட்டுள்ளார். வரும் 14ம் தேதி சஹரான்பூர், முசாபர் நகரில் மாயாவதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.