< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி
நாடாளுமன்ற தேர்தல்-2024

உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி

தினத்தந்தி
|
17 April 2024 2:42 PM IST

இந்த இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், அதிஷி, சவுரப் பரத்வாஜ், ஜாஸ்மின் ஷா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று ராம நவமியை முன்னிட்டு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக "உங்கள் ராம ராஜ்ஜியம்" (https://aapkaramrajya.com/) என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு செய்த நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், அதிஷி, சவுரப் பரத்வாஜ், ஜாஸ்மின் ஷா ஆகியோர் தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசினர்.

"கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் டெல்லியில் மூன்றுமுறை ஆம் ஆத்மி அரசை அமைத்துள்ளோம் என்பது மட்டுமல்ல, பஞ்சாபிலும் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளோம். கெஜ்ரிவால் தலைமையில் டெல்லியிலும், பகவந்த் மான் தலைமையில் பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. நாங்கள் செய்துள்ள பணிகளை மக்களுக்கு தெரிவிக்கவும், ராம ராஜ்ஜியத்தை அமைக்க வேண்டும் என்ற எங்கள் கனவின் உறுதியை வெளிப்படுத்தவும் இந்த இணையதளத்தைத் தொடங்கி உள்ளோம்

ராம ராஜ்ஜியம் குறித்த எங்கள் கனவை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த இணையதளத்தை அவசியம் காண வேண்டும். டெல்லியிலும், பஞ்சாபிலும் நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அதன் பிறகு நீங்கள் எங்களோடு இணையலாம்" என சஞ்சய் சிங் தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து டெல்லி மந்திரி அதிஷி பேசுகையில், "ராம சரிதம் தந்த உந்துதல் காரணமாகவே டெல்லி மற்றும் பஞ்சாப் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தனது அரசு கடந்த 9 ஆண்டுகளாக பாடுபட்டு கொண்டிருக்கிறது என கெஜ்ரிவால் கூறி இருக்கிறார். ராம ராஜ்ஜியம் குறித்த நிறைவை மக்கள் பெறுவதற்காக ராமர் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 14 ஆண்டுகள் வனத்துக்கு சென்றார். ஆனாலும், அவர் தனது வாக்குறுதியை மீறவில்லை. கெஜ்ரிவாலும் அதே கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்