நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ராகுல்காந்தி
|வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
கேரளாவில் ஏப்ரல் 26ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளா உள்பட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கியது. வரும் 4-ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.
இந்தநிலையில், வயநாடு தொகுதியில் நாளை மதியம் 12 மணிக்கு ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்கிறார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார்.
நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். வயநாட்டில் ராகுல்காந்தி வேட்பு மனுதாக்கல் செய்யும் போது ஒரு மெகா ரோடு ஷோ நடத்தப்படும் மற்றும் பேரணி நடைபெறும் என்று கேரள மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும் கடந்த முறை 19 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார். கடந்த 2019 தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.