< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024

காந்திநகர் தொகுதியில் மத்திய மந்திரி அமித்ஷா வேட்புமனு தாக்கல்

தினத்தந்தி
|
19 April 2024 1:41 PM IST

காந்திநகர் தொகுதியில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமித்ஷா 5 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி அமித்ஷா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் உடன் இருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

"இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். அதன்மூலம் நரேந்திர மோடியை 3-வது முறையாக பிரதமராக்க நாடு முழுவதும் உற்சாகம் காட்டி வருகிறது. நாட்டு மக்கள் கொடுத்த 10 ஆண்டுகள் காங்கிரஸ் அரசு ஏற்படுத்திய குழிகளை நிரப்பவே செலவழிக்கப்பட்டது. இந்த முறை வெற்றி பெற்ற பின் அடுத்த 5 ஆண்டுகள் விக்சித் பாரதம் அமைப்பதற்கான அடித்தளம் அமைக்கப்படும். இதனால் மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களித்து 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற செய்து, அனைத்து இடங்களிலும் தாமரையை மலர செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தொகுதியில் காங்கிரசின் சார்பில் சோனால் படேல் போட்டியிடுகிறார். காந்திநகர் தொகுதியில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமித்ஷா 5 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மத்திய மந்திரி அமித்ஷா காந்திநகர் தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்