'மகாபாரதத்தின் பாண்டவர், கவுரவர்களைப் போல் மக்களவை தேர்தலில் 2 அணிகள் இருக்கின்றன' - அமித்ஷா
|மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களைப் போல், மக்களவை தேர்தலில் 2 அணிகள் இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பாட்னா,
பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"ராகுல் காந்தியால் பீகாரையும், மதுபானியையும் வளர்ச்சியடைய வைக்க முடியவில்லை. ஆனால் கோடைக்காலங்களில் அவர் பாங்காக் மற்றும் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்கிறார். அதே சமயம், பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடுகிறார். மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களைப் போல், மக்களவை தேர்தலில் 2 அணிகள் இருக்கின்றன.
பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் நாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசக் கூடாது என 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் வலிமையான தலைமையின் கீழ், நாம் எந்த அணுகுண்டைப் பற்றியும் பயப்படத் தேவையில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் இந்தியாவுக்கே சொந்தமானது."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.