நாடாளுமன்ற இறுதி கட்ட தேர்தல்: 62.36 சதவீத வாக்குகள் பதிவு
|7-வது கட்ட தேர்தலில், மேற்கு வங்காளத்தில் அதிக அளவாக 73.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில் கடந்த 19-ந்தேதி முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும், மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெற்றன.
7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் தலா 13 இடங்களிலும், மேற்கு வங்காளத்தில் 9 இடங்களிலும் வாக்கு பதிவு நடைபெறுகிறது. இவை தவிர, பீகார் (8), ஒடிசா (6), இமாசல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3) மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான சண்டிகார் (1) ஆகிய இடங்களிலும் வாக்குபதிவு நடைபெற்றது.
ஒடிசா, அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 சட்டசபைகளுக்கான தேர்தலும், மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டது.
இதில் மக்களவைக்கான முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. 2-ம் கட்ட தேர்தலில், 66.71 சதவீதம் வாக்குகளும், 3-ம் கட்ட தேர்தலில், 65.68 சதவீதம் வாக்குகளும், 4-ம் கட்ட தேர்தலில், 69.16 சதவீதம் வாக்குகளும், 5-ம் கட்ட தேர்தலில், 62.2 சதவீதம் வாக்குகளும், 6-ம் கட்ட தேர்தலில், 61.98 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.
இந்த நிலையில், 7-வது கட்ட தேர்தலில், மொத்தம் 62.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இவற்றில் மேற்கு வங்காளத்தில் அதிக அளவாக 73.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதேபோன்று பீகாரில் 51.92 சதவீதம், சண்டிகாரில் 67.90 சதவீதம், ஒடிசாவில் 70.67 சதவீதம், பஞ்சாபில் 61.32 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 55.59 சதவீதம் மற்றும் இமாசல பிரதேசத்தில் 70.05 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.