பா.ஜ.க.வை விட்டு, விட்டு காங்கிரசையே கேரள முதல்-மந்திரி தாக்கி பேசுகிறார்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
|கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பழமையான காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் மட்டுமே தாக்கி பேசி வருகிறார் என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
பத்தனம்திட்டா,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, கேரளாவின் பத்தனம்திட்டா மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆன்டோ அந்தோணிக்கு வாக்கு கேட்டு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, பேரணியில் அவர் உரையாற்றும்போது, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சமரசம் ஆகி விட்டார். அவர், பழமையான காங்கிரஸ் கட்சியை மட்டுமே தாக்கி பேசி வருகிறார். ராகுல் காந்தியையும் தாக்கி பேசுகிறார். ஆனால், பா.ஜ.க.வை பற்றி பேசுவது இல்லை.
விஜயனின் பெயர் லைப் மிஷன் திட்டம், தங்க கடத்தல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் அடிபட்டு உள்ளது. ஆனால், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அவருக்கு எதிராக எந்தவித வழக்கையும் எடுத்து கொள்ளவில்லை. சோதனைகளும் நடத்தப்படவில்லை. அல்லது எந்தவித நடவடிக்கையும் அவருக்கு எதிராக நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
கால்பந்து போட்டி ஒன்றில், சமரசம் செய்து கொண்ட வீரரை வைத்து கொண்டு, நீங்கள் வெற்றி பெற முடியாது. அதேபோன்றுதான் சமரசம் செய்து கொண்ட முதல்-மந்திரி உங்களிடம் இருக்கிறார் என்று கடுமையாக பேசியுள்ளார்.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது சாரி அரசில், போதிய வேலைவாய்ப்புகள் இன்றி, கேரள மக்கள் வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு செல்கின்றனர் என்று குற்றச்சாட்டாகவும் கூறினார்.
அவர்கள், கட்சி தொண்டர்களுக்கே வேலைகளை கொடுக்கின்றனர். பொதுமக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும் ஆளும் அரசை அவர் கடுமையாக சாடியுள்ளார்.
இந்த பிரசாரத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, நில அபகரிப்பு வழக்கில் டி.எல்.எப். மற்றும் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு உள்ள தொடர்பு பற்றி விஜயன் பேசினார். அவர் பேசும்போது, டி.எல்.எப். நிறுவனத்தில் சி.பி.ஐ. அமைப்பு சோதனை நடத்தியது.
இந்த சோதனைக்கு பின்னர், அந்நிறுவனம் ரூ.170 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த பரிமாற்றத்தில் எந்தவித முறைகேடும் இல்லை என்று பின்னர் கோர்ட்டில் பா.ஜ.க. அரசு கூறியிருந்தது. தேர்தல் பத்திரங்கள் வழியே பா.ஜ.க.வுக்கு பணம் செலுத்தியதும், சி.பி.ஐ. சோதனையும், வழக்கும் முடிவுக்கு வந்தது என அவர் கூறினார்.