கைதுக்கு பின் கெஜ்ரிவாலின் உடல் எடை 4.5 கிலோ குறைந்து விட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
|கெஜ்ரிவாலுக்கு ஏதேனும் நடந்து விட்டால், ஒட்டு மொத்த நாடு மட்டுமின்றி, கடவுளும் கூட பா.ஜ.க.வினரை மன்னிக்கமாட்டார் என்று அதிஷி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு சமீப நாட்களாக பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதில், முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் மந்திரியாக இருந்த சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும், 6 மாத சிறைவாசத்திற்கு பின்னர் சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
இந்த வழக்கில், முக்கிய புள்ளியாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது. கடந்த 21-ந்தேதி இரவு, கெஜ்ரிவாலை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர் ஏப்ரல் 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டபோதும், கெஜ்ரிவால் 2 உத்தரவுகளை மந்திரிகளுக்கு அனுப்பினார். நீர் அமைச்சகம் தொடர்பான முதல் உத்தரவு, அரசால் நடத்தப்படும் மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் செய்வது பற்றிய 2-வது உத்தரவை அவர் வெளியிட்டார்.
அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 55 பேர் நேற்று கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து, எந்த சூழ்நிலையிலும் முதல்-மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவால் விலக கூடாது என வலியுறுத்தினர். டெல்லி அரசை சிறையில் இருந்து நடத்தலாம் என்றும் அவர்கள் அப்போது கூறினர்.
இந்த சூழலில் டெல்லி மந்திரியான அதிஷி இன்று வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், கெஜ்ரிவால் தீவிர நீரிழிவு நோயாளி ஆவார். ஆரோக்கிய பாதிப்புகள் இருந்தபோதும், நாளொன்றுக்கு 24 மணிநேரமும் நாட்டுப்பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து, கெஜ்ரிவாலின் உடல் எடை 4.5 கிலோ வரை குறைந்து போய் விட்டது. இது வருத்தத்திற்குரிய விசயம். அவரை சிறையில் தள்ளி, அவருடைய உடல்நலத்திற்கு பா.ஜ.க. ஆபத்து ஏற்படுத்தியுள்ளது என பதிவிட்டு உள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு ஏதேனும் நடந்து விட்டால், ஒட்டு மொத்த நாடு மட்டுமின்றி, கடவுளும் கூட அவர்களை மன்னிக்கமாட்டார் என்றும் அதிஷி தெரிவித்து உள்ளார். எனினும், கெஜ்ரிவாலின் முக்கிய உறுப்புகள் இயல்பாகவே இயங்கி வருகின்றன என திகார் சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு நேற்று காலை குறைந்தது. தொடர்ந்து, மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் அவர் உள்ளார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.