'வெளியில் இருக்கும் வரை கெஜ்ரிவால் எவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் பேசலாம்' - அனுராக் தாக்கூர்
|வெளியில் இருக்கும் வரை கெஜ்ரிவால் எவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் பேசலாம் என அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து டெல்லியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கெஜ்ரிவால், பிரதமர் மோடி தனது 75-வது வயதில் ஓய்வு பெறுவார் என்றும், அமித்ஷாவை அடுத்த பிரதமராக்க மோடி பிரசாரம் செய்து வருகிறார் என்றும் கூறியிருந்தார். இருப்பினும் கெஜ்ரிவால் கூறியதை திட்டவட்டமாக மறுத்த அமித்ஷா, மோடியே பிரதமராக நீடிப்பார் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மக்களவை தேர்தலுக்கான 10 உத்தரவாதங்களை வெளியிட்டார். இலவச கல்வி, 24 மணிநேரம் மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதை நான் உறுதி செய்வேன் என்றும் கெஜ்ரிவால் கூறினார்.
இந்நிலையில், வெளியில் இருக்கும் வரை கெஜ்ரிவால் எவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் பேசலாம் என மத்திய மந்திரியும், ஹாமிர்பூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்து பேசிக்கொண்டிருந்தவர், இன்று ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது இடைக்கால ஜாமீனில் வெளியே வந்திருக்கும் கெஜ்ரிவால், சில நாட்களில் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும். வெளியில் இருக்கும் வரை அவர் எவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் பேசலாம்.
ஆனால் உண்மை என்னவென்றால், அவரது மந்திரிகள் பலர் சிறையில் உள்ளனர், கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் உள்ளார். இதில் ஒரு சிறப்பும் இல்லை. கெஜ்ரிவாலின் உத்தரவாதங்கள் அனைத்தும் அவரது முந்தைய பணிகளைப் போல் போலியானவை. எனவே, அவர் எத்தனை உத்தரவாதங்களை கொடுத்தாலும் மக்கள் அவரை நம்பப்போவதில்லை."
இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.