'நாங்கள் ஆட்சியை தக்கவைப்போம் என்பதை கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார்' - பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்
|பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்கும் என்பதை கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டுள்ளார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டு நேற்றைய தினம் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கெஜ்ரிவால், பிரதமர் மோடி தனது 75-வது வயதில் ஓய்வு பெறுவார் என்றும், அமித்ஷாவை அடுத்த பிரதமராக்க மோடி பிரசாரம் செய்து வருகிறார் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்பதை கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டுள்ளார் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"கெஜ்ரிவால் பா.ஜ.க.வின் அடுத்த பிரதமருக்கான திட்டத்தைப் பற்றி பேசுகிறார். ஆனால் பணமோசடி குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், தனது கட்சியைச் சேர்ந்த யாரையும் டெல்லி முதல்-மந்திரியாக்கும் நம்பிக்கை அவருக்கு வரவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி மீது சர்வாதிகாரி என்ற விமர்சனத்தை முன்வைக்கும் கெஜ்ரிவால், தனது சகாக்களான பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ், குமார் விஸ்வாஸ் மற்றும் கிரண் பேடி போன்ற பலரை தூக்கி எறிந்தவர் ஆவார். அரசியலில் சேரும்போது அவர் கடைப்பிடித்த கொள்கைகளை நிராகரித்துவிட்டார்.
சில சமயங்களில் மதுப்பழக்கம் உள்ள ஒருவர் உண்மையை பேசுவது போல, மதுபானக் கொள்கை ஊழலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருகிறார் என்பதை தெரிந்தோ, தெரியாமலோ ஒப்புக்கொண்டுள்ளார்."
இவ்வாறு சுதான்ஷு திரிவேதி தெரிவித்தார்.