< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பல விதமாக நடித்துள்ளேன் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளரின் சர்ச்சைக்குரிய பதிவுக்கு கங்கனா ரனாவத் பதிலடி
நாடாளுமன்ற தேர்தல்-2024

'பல விதமாக நடித்துள்ளேன்' - காங்கிரஸ் செய்தி தொடர்பாளரின் சர்ச்சைக்குரிய பதிவுக்கு கங்கனா ரனாவத் பதிலடி

தினத்தந்தி
|
26 March 2024 8:43 AM IST

ஒரு நடிகையாக அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன் என்று கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. கடந்த 24-ந்தேதி வெளியிட்டது. இதன்படி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத்தின் கவர்ச்சி புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று வெளியாகி இருந்தது. இந்த பதிவு சர்ச்சையான நிலையில் பலரும் சுப்ரியா ஸ்ரீனேட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கங்கனா ரனாவத் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 20 வருடங்களில் ஒரு நடிகையாக நான் அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன்.

குயின் படத்தில் ஒரு அப்பாவி பெண்ணாகவும், தாக்கட் படத்தில் மயக்கும் உளவாளியாகவும், மணிகர்ணிகாவில் ஒரு தெய்வப் பெண்ணாகவும், சந்திரமுகியில் ஒரு பேயாகவும், ராஜ்ஜோவில் விபச்சாரியாகவும், தலைவியில் புரட்சிகரமான பெண்ணாகவும் நடித்துள்ளேன்.

கட்டுப்பாடுகளில் இருந்து நமது மகள்களை விடுவிக்க வேண்டும். அவர்களின் உடல் உறுப்புகள் பற்றிய ஆர்வத்தை தவிர்த்துவிட்டு உயர வேண்டும். அனைத்திற்கும் மேலாக, பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையை மோசமான விமர்சனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அனைத்து பெண்களுக்கும் கண்ணியம் உண்டு" என்று பதிவிட்டுள்ளார்.



அதே சமயம், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், தனது 'எக்ஸ்' தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது சமூக வலைதள பக்கங்களை பல்வேறு நபர்கள் பயன்படுத்தி வருவதாகவும், அதில் யாரோ ஒருவர் மோசமான பதிவை வெளியிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார். இது குறித்து தனது கவனத்திற்கு வந்த உடனேயே அந்த பதிவை நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ள அவர், பெண்களைப் பற்றி அந்தரங்கமான முறையில் விமர்சிக்கும் பழக்கம் தனக்கு கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்