ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் நாள் - பிரதமர் மோடி
|பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜனதா அரசு உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புவனேஷ்வர்,
ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் இரண்டு கட்டங்களாக வரும் மே 13 மற்றும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் அம்மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெர்காம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:
நேற்று நான் அயோத்தியில் இருந்தேன். ராமரை தரிசனம் செய்தேன். ஒடிசா மக்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். ஜூன் 4ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது. அன்று நாங்கள் பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரி யார் என்று அறிவிப்போம். ஜூன் 10ம் தேதி பா.ஜனதா முதல்-மந்திரியுடன் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
ஒடிசாவில் முதன்முறையாக பா.ஜனதா ஆட்சி அமைய போகிறது. பா.ஜனதா ஆட்சியில் ஒடிசா மாநிலத்திற்கு பட்ஜெட்டில் குறைவான பணம் ஒதுக்கியது இல்லை. மன்மோகன் சிங் பிரதமராக சோனியாவின் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி இருந்த போது, குறைவாகதான் பணம் ஒதுக்கி உள்ளது. இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கான சுகாதார வசதிகள், சுற்றுலா மேம்பாடு என பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை பா.ஜனதா அளித்துள்ளது. பா.ஜ.க. சொல்வதை நிறைவேற்றுகிறது.
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜனதா அரசு உறுதியாக உள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவருக்கு நாட்டின் மிக உயரிய பதவியை வழங்கிய பெருமை பா.ஜனதாவுக்கு தான். ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வழிகாட்டுதலின் கீழ் ஒடிசாவிற்கு என்னால் முடிந்த அளவு உதவிகளை செய்வேன்.ஒடிசாவை பல ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. ஒடிசாவில் தண்ணீர், விவசாயம், நீண்ட கடற்பரப்பு, கனிம தாதுக்கள், வரலாறு, பாரம்பரியம் என அனைத்தும் உள்ளன. இருப்பினும், ஒடிசா மக்கள் ஏன் ஏழைகளாக உள்ளனர்?
காங்கிரசும், பிஜு ஜனதா தளமும் கொள்ளையடித்ததுதான் ஒடிசா மக்களின் இந்த நிலைக்கு காரணம். பிஜு ஜனதா தளத்தின் சிறிய தலைவர்களும் பெரிய பங்களாக்களுக்கு சொந்தகாரர்களாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.