உதகையில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி ரத்து
|தேர்தல் பணி காரணமாக ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
உதகை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உதகையில் நாளை நடைபெற இருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணி காரணமாக வாகன பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை புதுச்சேரியில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்தும் நாளை பரமக்குடியில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் ஜே.பி.நட்டா வாகன பேரணியில் பங்கேற்கிறார். ஏற்கனவே, உதகையில் நேற்று வாகன பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.