மோடியின் ஆட்சிக்கு பிறகு தான் இந்தியாவை உலகநாடுகள் மதிக்கின்றன- பாரிவேந்தர்
|திருச்சி மாவட்டத்தில் பாரிவேந்தர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது,
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019த்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள்.இந்த பகுதியில் பள்ளிகளில் 42 வகுப்பறைகள் கட்டி கொடுத்திருக்கிறேன். நீர் தேக்க தொட்டி அமைத்துக் கொடுத்திருக்கிறேன். இதுவரை மூன்று மேம்பாலங்கள் கட்டிகொடுத்திருக்கிறோம். 9 தரைப்பாளங்களை கட்டிக்கொடுத்திருக்கிறோம். அதேபோல் அரியலூர், பெரம்பலூர், துரையூர், நாமக்கல் இதை இணைக்கும் ரெயில் பாதை அமைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு பாதி வேலை முடிவடைந்துவிட்டது.
கடந்த 10 வருடங்களாக மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் அவரை யாரும் குறை கூற முடியுமா? மந்திரிகள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் இங்கு அப்படியில்லை. ஊழல் செய்து வழக்கில் உள்ளார்கள். எப்படி தப்பிப்பார்கள் என்றும் தெரியவில்லை. ஆகவே இந்தியாவிற்கு நல்ல ஆட்சி கொடுத்து, உலக நாடுகள் அனைத்தும் வியந்து பார்த்த அந்த மாமனிதரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.
மோடியின் ஆட்சிக்கு பிறகு தான் இந்தியாவை உலகநாடுகள் மதிக்கின்றனர். மோடியின் கரங்களை வலுப்படுத்துவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமை. இந்தியா கூட்டணி இந்தியாவை காப்பாற்ற வருபவர்கள் அல்ல. இந்தியாவை உடைப்பதற்கு வருகிறார்கள். ஒற்றுமை என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்தையும் பிரிப்பதற்கு வழிவகுக்கிறார்கள். என்று கூறினார்.