ஆரத்தி எடுத்தபோது பணம் கொடுத்த விவகாரம்: ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு
|புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்தபோது பெண்களுக்கு பணம் கொடுத்தது, அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்பட 3 பிரிவுகளில் ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தேர்தலில் போட்டியிட தனக்கு அதிக இடங்கள் தர முன்வந்தபோதும், இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழலில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட உள்ளேன் என கூறினார்.
இதன்படி, நாடாளுமன்ற தேர்தலில், ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். இதனையடுத்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
எனினும், ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் பெயரில் சுயேச்சை வேட்பாளர்களாக 6 பேர் போட்டியிடுகின்றனர். இதனால், அவர் வெற்றியை பெற கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடந்த பா.ஜ.க. கூட்டணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓ. பன்னீர்செல்வம் வந்துள்ளார்.
அவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதிக்கு வந்தபோது, பெண்கள் சிலர் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது, அவர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் பணம் வழங்கினார். தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் வகையில், அவர் ரூ.2 ஆயிரம் பணம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதேபோன்று அவர், வாளி சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டு வந்த நிலையில், அவருடைய பெயரில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களும் அதே சின்னம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடந்த பா.ஜ.க. கூட்டணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபற்றி அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விதிகளை மீறி பணம் வழங்கியது, அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்பட 3 பிரிவுகளில் அறந்தாங்கி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.