தேர்தல் வரும்போதுதான் கச்சத்தீவு தெரியவருகிறதா? - சீமான் கேள்வி
|மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் செம்பட்டியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாங்கள் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம். யார், யாருக்கோ வாக்கு அளித்து ஏமாந்த தமிழ் சொந்தங்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பி இந்த தேர்தலில் நிற்கிறோம். அடிப்படை அரசியல் மாற்றம் தேவை என்பதற்காக தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் நமக்கு அரை நூற்றாண்டுகள் பகை, பா.ஜ.க. நமக்கு 3,000 ஆண்டுகள் பகை. பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்காக ஊர், தெரு, வீடு வீடாக வந்து ஆதரவு கேட்டாலும் ஒரு வாக்கு கூட பா.ஜ.க.வுக்கு இல்லை என்கிற நிலையை மக்கள் உருவாக்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்டுத்தாருங்கள் என்று 6 மாதங்களுக்கு முன்பே நான் கடிதம் எழுதினேன்; கச்சத்தீவு நம்மிடம் இல்லை என்பது பா.ஜ.க.வுக்கு தேர்தல் வரும்போதுதான் தெரியவருகிறதா?. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எதிர்ப்பது பரம்பரையாக நீடிக்கிறது. வெள்ளையர்களைவிட பா.ஜ.க.வினர் பேராபத்தானவர்கள். நான் எழுப்பும் கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை.
நமது கட்சி வேட்பாளர் கயிலை ராஜனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். எங்களின் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. எங்களின் வெற்றி.. உங்களின் வெற்றி... இனம் ஒன்றாவோம்... இலக்கை வென்றாவோம். இவ்வாறு அவர் கூறினார்.