< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
இலவச திட்டங்களை அமல்படுத்த எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா? ராகுல் காந்திக்கு நிதி மந்திரி கேள்வி
நாடாளுமன்ற தேர்தல்-2024

இலவச திட்டங்களை அமல்படுத்த எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா? ராகுல் காந்திக்கு நிதி மந்திரி கேள்வி

தினத்தந்தி
|
13 May 2024 5:56 PM IST

இலவச திட்டங்களுக்காக கணிசமாக கடன் வாங்குவார்களா அல்லது அந்த திட்டங்களுக்கு நிதியளிக்க வரிகளை உயர்த்துவார்களா? என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி:

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இந்த வாக்குறுதி குறித்து அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற இலவச திட்டங்கள் மற்றும் தற்போதைய நிதி நிலவரம் தொடர்பாக மத்திய நிதி மந்திரியும் பா.ஜ.க. தலைவருமான நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சி குறுகிய கால கவர்ச்சிகரமான நடவடிக்கைகளில் செலவு செய்வதில ஆர்வமாக உள்ளது. நீண்ட கால வளர்ச்சியில் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உயர்ந்த வாக்குறுதிகளின் மதிப்பை கருத்தில் கொண்டதா? இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்று அவர்கள் கணக்கிட்டார்களா? அந்த திட்டங்களுக்காக அவர்கள் கணிசமாக கடன் வாங்குவார்களா அல்லது அந்த திட்டங்களுக்கு நிதியளிக்க வரிகளை உயர்த்துவார்களா?

இலவச திட்டங்களின் நிதிச் செலவை ஈடுகட்ட ராகுல் காந்தி எத்தனை நலத்திட்டங்களை முடக்குவார் என்று தெரியவில்லை.

இந்த கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளிப்பாரா? வரிகளை அதிகரிக்காமலோ அல்லது அதிக அளவில் கடன் வாங்காமலோ, பொருளாதாரம் சரியாமலோ அவர்களின் மாபெரும் நிதித் திட்டங்களை எப்படி செயல்படுத்துவார்கள் என்பதை விளக்குவாரா?

உண்மை நிலவரம் என்னவென்றால், கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்காக நிவாரண பணிகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதிலும், பா.ஜ.க. அரசாங்கத்தின் நிதி நிர்வாகம், கடந்த கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விட மிகச் சிறப்பாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்