தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல்: திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
|சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினரை திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் , ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் காரில் வந்துகொண்டிருந்தார். அவரது காரை பறக்கும் படை கண்காணிப்பு நிலைக்குழுவினர் ஓரமாக நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது கோபமடைந்த ஏ.பி.முருகானந்தம் வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன் என்று சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது குன்னத்தூர் காவல் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் புகார் அளித்தனர். தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வாக்குவாதம் செய்ததாக புகார் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
— Thanthi TV (@ThanthiTV) April 5, 2024