'பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது' - ஜே.பி.நட்டா
|மோடி மீண்டும் பிரதமரானால், உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உயரும் என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பிடார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க. வேட்பாளர் பகவந்த் கூபாவை ஆதரித்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;-
"கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டை மாற்றுவதற்கு யாராலும் முடியாது என்றும், அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரே மாதிரியானவர்கள்தான் என்றும் மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியில், பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ரஷியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் சரிந்து கொண்டிருக்கும்போது, இந்தியா மட்டும் பிரகாசமான நட்சத்திரத்தைப் போல் முன்னேறி வருகிறது.
தற்போது உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்துள்ளது. அதோடு, இந்தியாவை சுமார் 200 வருடங்கள் ஆட்சி செய்த இங்கிலாந்தை விடவும் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறியுள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உயரும்."
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.