< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
Jairam Ramesh
நாடாளுமன்ற தேர்தல்-2024

48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார் - ஜெய்ராம் ரமேஷ்

தினத்தந்தி
|
30 May 2024 1:49 PM IST

அதிக எம்.பி.க்களை பெறும் கட்சிக்கே தலைமை பதவி வழங்குவது இயற்கை என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

தொடர்ந்து 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. 400-க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து அந்த கட்சி பிரசாரம் செய்துள்ளது. ஆனால் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறார்கள். தங்களுக்கு 350 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இதுவரை பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இதன் காரணமாக மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணிக்கு இடங்கள் கிடைக்கும். இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் கூட்டணியில் சேரலாம். அவர்களை இந்தியா கூட்டணியில் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைமை வகிக்கும், கார்கே, ராகுல் காந்தி , சோனியா காந்தி, ஆகியோர் முடிவு செய்வார்கள்.

இந்தியா கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இரண்டே வித்தியாசம் தான். இந்தியா கூட்டணி நேர்மை மற்றும் மனித நேயத்துடன் செயல்படுகிறது. வெற்றியில் பெரிய மனதுடன் இருக்க போகிறோம் என்று நினைக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி புகழ்பெற்ற விவேகானந்தர் பாறை நினைவிடத்திற்கு சென்று 3 நாட்கள் தியானத்தில் இருக்கிறார். செப்டம்பர் 7, 2022 அன்று ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கிய அதே விவேகானந்தர் நினைவிடத்தில் இருந்துதான் மோடி ஓய்வு பெற்ற பிறகு என்னவாக இருக்க போகிறார் என்று தியானிக்க போகிறார் என்று நான் நம்புகிறேன்.

2024 மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி ஒரு தீர்மானமான ஆணையை பெறும். அதன் பிரதமர் தேர்வு குறித்து முடிவெடுக்க 48 மணிநேரம் கூட ஆகலாம். நான் எண்ணிக்கையில் இறங்க விரும்பவில்லை. ஆனால், இந்திய கூட்டணி தெளிவான மற்றும் தீர்க்கமான பெரும்பான்மையைப் பெறுவோம். 273 என்பது தெளிவான பெரும்பான்மை. 272 இடங்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். மேலும் தேர்தலில் அதிக எம்.பி.க்களை பெறும் கட்சிக்கே தலைமை பதவி வழங்குவது இயற்கை." என்றார்.

மேலும் செய்திகள்