தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது - தயாநிதி மாறன்
|தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும் என தயாநிதி மாறன் தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளன. இந்த நிலையில் தி.மு.க. மற்றும் 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் தயாநிதி மாறன், தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர்."
இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்தார்.