20 ரூபாய் நோட்டு மாலையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த இந்திய ஊழல் கூட்டமைப்பு வேட்பாளர்
|மத்திய சென்னை தொகுதியில் 20 ரூபாய் நோட்டு மாலையுடன் அக்னி அல்வார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. கடந்த 7 நாட்களாக அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதில் சில வேட்பாளர்கள் வித்யாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்து மக்களின் கவனத்தை ஈர்த்தனர். சில வேட்பாளர்கள் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். சில்லறை நாணயங்களை கொடுத்து சில வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இன்றும் சிலர் வித்யாசமான முறையில் வந்து தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அந்த வகையில் மத்திய சென்னை தொகுதியில் 20 ரூபாய் நோட்டு மாலையுடன் வந்த வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய சென்னை தொகுதியில் அகில இந்திய ஊழல் கூட்டமைப்பு என்ற அமைப்பு சார்பில் அக்னி அல்வார் என்பவர் நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட உள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வந்த அக்னி அல்வார் தனது கழுத்தில் 20 ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்தவாறு வந்தார். வேட்புமனு தாக்கல் செய்ய 20 ரூபாய் நோட்டு மாலையுடன் வந்த அக்னி அல்வார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் தி.மு.க. சார்பில் தயாநிதிமாறன், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் பார்த்த சாரதி, பா.ஜ.க. சார்பில் மனோஜ் செல்வம், நாம் தமிழர் சார்பில் கார்த்திகேயன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.