< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
உ.பி.யில் இந்த முறை 2014-ஐ விட அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் - அமித்ஷா நம்பிக்கை
நாடாளுமன்ற தேர்தல்-2024

'உ.பி.யில் இந்த முறை 2014-ஐ விட அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்' - அமித்ஷா நம்பிக்கை

தினத்தந்தி
|
20 March 2024 4:52 PM IST

உத்தர பிரதேசத்தில் 2014-ம் ஆண்டை விட 2024 மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என அமித்ஷா தெரிவித்தார்.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டை விட இந்த முறை அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "உத்தர பிரதேசத்தில் 2014-ம் ஆண்டை விட 2024 மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்" என்றார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை இடங்களில் கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க. 71 இடங்களை கைப்பற்றியது. தொடர்ந்து 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 62 இடங்களில் வெற்றி பெற்றது.

ஒடிசா மாநிலத்தில் இந்த முறை மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு, இது குறித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இறுதி முடிவை எடுப்பார் என அமித்ஷா பதிலளித்தார்.

அதே போல் பஞ்சாப் மாநிலத்தில் ஷிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அடுத்த ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் பா.ஜ.க. 17 இடங்களில் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்ற இடங்களில் போட்டியிடுகின்றன. பீகாரில் முதல் முறையாக கூட்டணி கட்சிகளை விட அதிக தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட உள்ளதாக அமித்ஷா கூறினார். மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 இடங்களில் 25 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெறும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பொது சிவில் சட்டம் குறித்து பேசிய அமித்ஷா, "பொது சிவில் சட்டம் குறித்து 1950-ல் இருந்தே நாங்கள் பேசி வருகிறோம். எங்கள் கட்சி இதற்காக கடுமையாக போராடியுள்ளது. அதில் இருந்து விலகிச் செல்ல முடியாது. மதச்சார்பற்ற நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். பொது சிவில் சட்டம் என்பது நாட்டு மக்களுக்கு பா.ஜ.க. அளித்த வாக்குறுதி" என்றார்.

தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டம்(சி.ஏ.ஏ.) குறித்து பேசிய அவர், "எதிர்கட்சிகள் அரசியல் நோக்கத்திற்காக சிறுபான்மையினரின் குடியுரிமையை சி.ஏ.ஏ. பறிக்கும் என்று தவறான கருத்தை பரப்பி வருகின்றன. ஆனால் சி.ஏ.ஏ. யாருடைய குடியுரிமையையும் பறிக்காது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியர், ஜெயின், புத்த, கிறிஸ்தவ மற்றும் பார்சி சமூகங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும். இந்த நாட்டின் முஸ்லிம்கள் பயப்படத் தேவையில்லை. சி.ஏ.ஏ. என்பது குடியுரிமையை பறிப்பதற்கான சட்டம் அல்ல, குடியுரிமை வழங்குவதற்கான சட்டம்" என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்