'கவுகாத்தியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும்' - அசாம் முதல்-மந்திரி நம்பிக்கை
|அசாமில் முதற்கட்ட தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திஸ்பூர்,
அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 மக்களவை தொகுதிகளில் கசிரங்கா, சோனித்பூர், லக்கிம்பூர், திப்ருகார் மற்றும் ஜோர்ஹாட் ஆகிய 5 தொகுதிகளுக்கு கடந்த 19-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதம் உள்ள 5 தொகுதிகளுக்கு வரும் 26-ந்தேதியும், 4 தொகுதிகளுக்கு மே 7-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதற்கட்ட தேர்தலில் அசாம் மாநிலத்தில் 75.95 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முதற்கட்ட தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அசாமில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 5 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். இரண்டாம் கட்ட தேர்தலில் கரிம்கஞ்ச் தொகுதியிலும், மூன்றாம் கட்ட தேர்தலில் துப்ரி தொகுதியிலும் அமோக வெற்றி கிடைக்கும். கவுகாத்தி தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.